மருதமுத்து...

|

மருதமுத்து, சென்னையில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் அறிமுகமானான். எங்கள் ஊரைச் சேர்ந்தவன், ஆனாலும் அங்குதான் முதன் முதலாய் பார்த்தேன். கால் ஊனத்துடன் நிறைய மன தைரியத்துடன்.

லேர்னிங் சிஸ்டத்தில் ஸ்போகன் க்ளாஸ் போகும்போது அவன் வேலை செய்துகொண்டிருந்த அசோக் பில்லர் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சென்றும் பார்த்தேன். நன்றாக கவனித்தான், எல்லோரிடமும் அறிமுகம் செய்து வைத்து சந்தோஷப்பட்டான், சமையலறையில் வேலை.

'ஓட்டல்-ல சாப்பிடக்கூடாதுன்னா, செய்யறத பார்த்தீங்கன்னா அவ்வளவுதான்' அனுபவத்தில் சொன்னான். அதன்பின் வாரா வாரம் ரூமிற்கு வந்துவிடுவான், நிறைய பேசிக்கொண்டிருப்போம். சினிமாவில் டைரடராகவேண்டும் என்பது அவனது கனவு. கதை சொல்லு மருதமுத்து என சொல்லிவிட்டால் போதும், உடனே ஆரம்பித்துவிடுவான்.

'அண்ணா ஹீரோயின் பணக்கார வீட்டுப்பொண்ணு, ரோட்டுல நடந்து போய்கிட்டிருக்குது'

'அப்போ ஹீரோ ஏழைதானே'

'சும்மா கேளுங்கண்ணா, அப்போ அங்க ஒரு ஐஸ்கிரீம் கடை இருக்கு. ஒரு ஐஸ்கிரீமை காசு கொடுத்து வாங்கி கீழப்போட்டு மிதிக்குது'

'ஏன் மருதமுத்து'

'அதோட பணத்திமிற காட்டுறோம்னா'

அதன் பிறகு சினிமா சினிமா என்றே இருந்தான். கடைசியில் எங்கள் ஊரிலேயே ஒரு அரிசிக்கடை வைத்ததாய் கேள்விப்பட்டேன், அப்படியே எல்.ஐ.சி. ஏஜன்டாகவும் இருப்பதாய் பார்த்தபோது சொன்னான்.

சரியாய் இரண்டு வருடங்களுக்கு முன்னால் தெருவில் சென்று கொண்டிருந்தவன் என்னைப் பார்த்ததும் வீட்டிற்கு வந்தான். நலம் விசாரிப்புக்குப்பின் 'சினிமா கனவு என்ன ஆச்சு' எனக் கேட்டதற்கு

'அதெல்லாம் கானல் நீர்னா. நமக்கு தேவையில்லை, சரிப்படாது' என சொல்லி முன்பை விட இன்னும் மன உறுதியாய் சென்றான். ஆனாலும் அதற்காக அவன் இழந்தது எத்தனையோ பொன்னான வருடங்களை.

என் தம்பியிடம் பேசும்பொழுது நடந்த உரையாடல் அப்படியே கீழே...

'அண்ணா உனக்கு மருதமுத்துவை தெரியுமா?'

‘யாரு, கொய்யானா?’

‘இல்லன்னா, சினிமா மருதமுத்து’

‘ஆமா, தெரியும். என்ன விஷயம்?’

‘நேத்து சாயங்காலம் சூசைட் பண்ணிக்கிட்டான்’

‘அய்யோ, என்ன ஆச்சு?’

‘காமாலை, சுகர். நாட்டு வைத்தியத்த மட்டும் செஞ்சிக்கிட்டிருந்தான். கால்ல தண்ணி சேர ஆரம்பிச்சிடுச்சி. ரெண்டு நாளுக்கு முன்னால தறிக்கு வந்து இங்க வேலை பாக்குற எல்லா பசங்ககிட்டயும் பேசிக்கிட்டிருந்தான். எல்லாத்துகிட்டேயும், கண்டிப்பா நாம பாப்போம்னு ஒரு மாதிரியா அழுத்தி சொல்லிட்டு அவன் ஃபிரண்ட் கூட சைக்கிள்ல போயிட்டான்’

‘ஊரையெல்லாம் சுத்தி பார்த்துட்டு, படிச்ச ஸ்கூல், கோவில் ஒவ்வொரு ஃப்ரண்ட் வீட்டுக்கும், அதிகமா அவர் இருக்கிற லைப்ரரின்னு எல்லா இடத்துக்கும் போயிருக்கான். அவனோட அம்மா பேர்ல எல்லா பேங்க் அக்கவுண்ட்டயும் மாத்தி, பணம் தர வேண்டியது, கொடுக்கவேண்டியது எல்லாத்தையும் செட்டில் பண்ணியிருக்கான்.’

‘அவங்க தெருவில இருக்கிற பசங்களுக்கெல்லாம் நல்லா படிக்க சொல்லி அட்வைஸ் பண்ணியிருக்கான். எல்லாருக்கும் சாக்லேட் வாங்கிக் கொடுத்திருக்கான். கடைசியா மதியம் ஒரு மணி வாக்குல பக்கத்து வீட்டுல இருக்கிற அவன் ஃபிரண்ட கூப்பிட்டு முக்கியமான வேலையா வெளியே போகனும், இப்ப தூங்கப் போறேன், நாலு மணிக்கு எழுப்பிவிடுன்னு சொல்லிட்டு காதுக்குள்ள மருந்த ஊத்திக் கிட்டு படுத்துட்டான். நாலு மணிக்கு பார்த்தா கட்டில்ல செத்துக்கிடக்கிறான்’

கேட்டு என் மனது என்னவோ போல் ஆகிவிட்டது! இதுதான் வாழ்க்கையா என. தற்கொலை கோழைத்தனமான முடிவு, சட்டென உணர்ச்சி வேகத்தில் எடுக்கக்கூடியது என எண்ணியிருந்த எனக்கு எனக்கு அதன் இன்னொரு பரிமாணமும் புரிந்தது.

மருதமுத்து, அடுத்த பிறவியிலாவது குறைவின்றி பிறந்து உனது எண்ணங்களையெல்லாம் நிறைவேற்றி எல்லாம் சாதிக்கவும், உனது ஆன்மா சாந்தியடையவும் வேண்டுகிறேன்!

20 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Punnakku Moottai said...

பாவம் மருதமுத்துவுக்கு உடலில் ஊனம், தன் நம்பிக்கையில் ஊனம், பொருளாதாரத்தில் ஊனம், அவர் தேர்ந்தெடுத்த தொழிலும் ஒரு ஊனமான தொழிலே.

வாழ்கையில் சிலருக்கு வழிகாட்டுதல் தேவையில்லை, தாமாகவே முன்னேறி விடுவார்கள். சிலருக்கு வழிகாட்டுதல் மிக அவசியம் தேவை. இருந்தால் அவர்களும் ஏதாவது ஒரு நிலைக்கு வந்துவிடுவர். ஆனால் பாவம் மருதமுத்து. இரண்டுமே இல்லாமல் போய்விட்டார்.

அனுதாபங்கள். ஆனால் அவரின் முடிவு, மிக தீர்க்கமாக யோசித்து எடுக்கப்பட்டது போல் தோன்றுகிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மருதமுத்துவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

sriram said...

பிரபாகர்..
மருத முத்து ... :)

நீங்களும் Learning Systems Inc ல ஆங்கிலம் கத்துகிட்டீங்களா?? நான் Ignatious Silva வின் ஆரம்பகால மாணவர்களில் ஒருத்தன் (1990-1993), அவர் மகன் சுனில் சில்வாவின் personality Development வகுப்புகளும் அருமை.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Unknown said...

மருதமுத்துவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..

அப்புறம் பிரபா.. ரொம்ப சூசைட் செய்துக்கிறவங்களைப் பத்தியே எழுதற மாதிரி இருக்கு.. ப்ளீஸ் கொஞ்சம் மாத்திக்குங்களேன்.. ஜஸ்ட் எ ரெக்வெஸ்ட்.

Paleo God said...

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே பிரபாகர்!!

என்ன சொல்றீங்க?

;)

settaikkaran said...

மருதமுத்து உடல் ஊனத்தையும் மீறி மனதிடம் உள்ளவராகவே தான் இருந்து வந்திருக்கிறார் என்று புரிகிறது. அதனாலோ என்னவோ அவரது விபரீத முடிவு அதிர்ச்சியாகவும் சற்றுப் புதிராகவும் இருக்கிறது. நல்ல பகிர்வு!

செ.சரவணக்குமார் said...

'மருதமுத்து' மனதைப் பாதித்த மற்றொரு இடுகை பிரபா.

தமிழ்போராளி said...

நண்பர் மருதமுத்துவின் வாழ்வை பற்றிய கட்டுரை படித்தேன். மௌனமாய் அழுதுகொண்டிருக்கிறேன்...
சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் ஏன் சினிமாவை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறது. யார் ஒருவர் கடவுள்,சினிமா,மது இவைகளுக்கு அடிமையாகிறார்களோ அவர்களை மாற்றுவது கடினம். எந்த ஒரு சூழ்நிலையிலும் மரணத்தை நாம் தேடிபோகக்கூடாது... நம்பிக்கைதான் வாழ்க்கை. தன்மீது நம்ப்பிக்கை வையுங்கள்..வாழ்ந்து காட்டாலாம் நான்கு பேருக்கு உதாரணமாக....

vasu balaji said...

மருத முத்து பாவம். மீ பாவம். அவ்வ்வ்.

Chitra said...

உயிரின் மதிப்பு அறிந்து இருந்தால்.......ம்ம்ம்ம்.......

சங்கர் said...

தினேஷை ரிப்பீட்டுகிறேன் :(

shortfilmindia.com said...

ஊரில் இருந்த போது சொல்லியிருக்கிறீர்கள் அண்ணே..

கேபிள் சங்கர்

கலகலப்ரியா said...

ம்ம்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இது வருத்ததுக்குரியது...

தவறாக நினைக்கவேண்டாம்..
என்னுடைய பார்வையில, இது கோழைத்தனமான முடிவு சார்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பிரச்சனையில்லா , ஒரு மனுஷனை காட்டுங்க பார்ப்போம்...

தற்கொலைதான் முடிவென்றால்.என்னுடைய பதில்...சே..

சத்ரியன் said...

உங்களின் கதைகள் (அனுபவம்) கொஞ்சம் சிந்திக்கத் தூண்டுகிறது.

(ஆனாலும் , பெரும்பாலான ‘கதாபாத்திரங்க’ளைக் கொன்று குவிப்பதில் அப்படியென்ன ஆர்வம் பிரபா?.)

Minmini.com said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

ஹேமா said...

நிறைந்த அனுபவச் சூழல்
உங்களுக்கு பிரபா.

பனித்துளி சங்கர் said...

பதிவை வாசித்து முடித்து பல நிமிடங்கள் கடந்துபோகியும் இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து மீளாதவனாய் இருக்கிறேன் . பகிர்வுக்கு நன்றி !

க.பாலாசி said...

வருத்தத்தை பதிவதைத்தவிர வேறு வழியில்லைங்கண்ணே...

ஆனாலும் எத்தனப்பேரு இந்தமாதிரி இருக்காங்க பாருங்க......கோழைத்தனமா இயலாமையா... என்ன சொல்ல....

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB