தீராத விளையாட்டுப் பிள்ளை...

|

கிருஷ்ணனுக்கு அந்த தாத்தாவைப் பிடிக்கவே பிடிக்காது, அவனோடு சேர்ந்து அவனது பாட்டிக்கும். கண்ணாடிக்கார தாத்தா எனத்தான் எல்லோரும் அவரை சொல்லுவார்கள். வீட்டில் ஏதேனும் விசேஷமென்றால் ஒரு மாதம் முன்பாகவே வந்துவிடுவார். எல்லாம் முடித்தபின் தான் கிளம்பி செல்லுவார். உறவு எப்படி என அவனுடைய தாத்தாவிடம் கேட்டதற்கு அவர் சொன்னது புரிந்து கொள்ளும் அளவிற்கு இல்லை. தூரத்து சொந்தம் என்பது மட்டும் புரிந்தது.

நீளமான முகம், சிவந்த தேகம், அடர்த்தி குறைவாய் எண்ணையிடப்பட்டு அழுந்த வாரப்பட்டிருக்கும் தும்பைப் பூவாய் வெளுத்த தலைமுடி. மீசை மழிக்கப் பட்டு சிரித்த வண்ணமே இருக்கும் முகத்தில், பாதி வெள்ளை, பாதி காவி என எப்போதும் வெளியே தெரியும் மொச்சைப் பற்கள், காவியேறிய வேஷ்டி, சட்டை. அவரை ‘டேய் பல்லா’ எனத்தான் தாத்தா கூப்பிடுவார். சிரித்தபடியே சொல்லுங்கண்ணா என பின்னாடியே செல்லுவார். கண்பார்வைக் குறைவைப் போக்க மொத்தமான ஒரு கண்ணாடியை அணிந்திருப்பார். கிருஷ்ணனுக்கு அவரைப் பிடிக்காததற்கு அவனது தாத்தா அவர் வந்ததிலிருந்து கொஞ்சம் அவனைவிட்டு விலகியிருப்பதாய் உணர்ந்ததாலும் இருக்கலாம்.

அவருடன் வரும் அந்த ஒரு உர மூட்டையில் செய்த அழுக்கேறிய பைதான் அவரின் சொத்து. இரண்டு வேஷ்டி சட்டை பட்டாபட்டி ட்ரவுசர் என இருக்கும். இடுப்பில் ஒரு துணிப்பையை சுருட்டி வைத்திருப்பார். அதில் வெற்றிலைப் பாக்கு, புகையிலை, ஒரு சிறிய சுண்ணாம்பு வைத்துக்கொள்ளும் டப்பா, வெள்ளை பாலிதீன் பையில் மடித்து மடித்து வைக்கப்பட்ட பணம், ஒன்றிரண்டு சீட்டுகள் என இருக்கும்.

காலையில் எழுந்ததும் வேப்பங்குச்சியில் பல்துலக்கி ஆயா தரும் நீராகாரத்தை குடித்துவிட்டு தாத்தாவோடு பேசிக்கொண்டே காட்டுக்கு கிளம்பிவிடுவார். மதியமோ அல்லது மாலையோ வீட்டிற்கு திரும்ப வருவார். விடுமுறை நாட்களில் அவர் வீட்டில் இருக்கும்போது கிருஷ்ணன் அவனது நண்பர்களோடு சேர்ந்து கோபத்தை பல வழிகளில் தீர்த்துக்கொள்வான்.

தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரின் வேட்டியை சட்டென உருவிட விலுக்கென எழுந்து நிற்பார், சிரித்த படியே இது மாதிரியெல்லாம் விளையாடக்கூடாது எனச் சொல்லுவார். கல்யாணமுருங்கை மரத்தில் கிடைக்கும் சூட்டுக்கொட்டையை கல்லில் தேய்த்து அவரின் காலில் சூடு வைப்பான், பதறாமல் படிக்கிற பையன் இதுபோல் செய்யக்கூடாது என அன்பாய் சொல்லுவார்.

தூங்கும்போது கோழிக்குஞ்சுகளைப் பிடித்து அவரின் மேல் போடுவான், தூக்கம் கலைந்துவிட அதற்கும் கோபித்துக்கொள்ள மாட்டார். தட்டுக்களை எடுத்துச் சென்று அருகில் போய் படபடவென சேர்ந்து தட்ட பதறி எழுந்தாலும் கடிந்து கொள்ளாமல் அறிவுறுத்துவார்.

இது கிருஷ்ணனுக்கு இன்னமும் ஏதாவது செய்யவேண்டும் எனும் எண்ணத்தை அதிகப்படுத்தவே செய்தது. ஒருமுறை கொல்லைப்புறத்தில் துவைத்து அவர் காயவைத்திருந்த வேஷ்டியில் சேற்றினை வீசி ஓட அதை அவர் பார்த்துவிட்டதை கவனித்த கிருஷ்ணன் ஆஹா இன்று வசமாய் மாட்டினோம் என பயந்த வண்ணம் வீட்டிற்கே வராமல் பயந்திருந்தான். சாப்பாட்டு வேளையில் ஆயா அழைப்பதாய் அவனை வந்து கூட்டிச்சென்றார் எதுவும் சொல்லாமல்.

மதிய நேரம், கட்டிலில் அமர்ந்து வெற்றிலைக் காம்பினைக்கிள்ளி, அந்த சிறிய சுண்ணாம்பு டப்பாயிலிருந்து சிறு விள்ளல் எடுத்து மெதுவாய் தடவி, பாக்கினைப் பிட்டு உள்ளே வைத்து நன்கு மடித்து வாய்க்குள் வைத்து மெல்ல ஆரம்பித்தார். தாத்தா அந்த சுண்ணாம்பு டப்பாவைத் தாருங்கள் பார்த்துவிட்டுத் தருகிறேன் என கிருஷ்ணன் கேட்க உடனே கொடுத்தார்.

அவன் எடுத்துக்கொண்டு ஓட, அவர் பின்னாலேயே துரத்தி ஓட ஆரம்பித்தார். ‘கிஷ்ணா, அத கொடுத்திடு’ என. என்ன நினைத்தானோ தெரியவில்லை, சட்டென அந்த சுண்ணாம்பு டப்பாவை பக்கத்தில் இருந்த கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டான்.

அவர் ஆவேசமாய் அவனை பிடித்து முதுகிலும் கன்னத்திலும் சப்பு சப்பென்று அடித்துவிட அவருக்கும் அவ்வளவு கோபமா என பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி. ‘விளையாடறதுக்கு ஒரு அளவில்ல, இதெல்லாம் விளையாட்டா?’ எனக் கத்தி பின் அடித்துவிட்டோமே என கலங்க ஆரம்பித்தார்.

பாட்டி, ‘பெரிய மனுஷன்னா அறிவு வேணும், இப்படியா பச்ச புள்ளைய போட்டு அடிக்கிறது, கடங்காரன், சனியன்’ என திட்ட ஆரம்பித்தார்கள். அழுதுக்கொண்டே கிருஷ்ணன் பாட்டி மடியில் படுத்து உறங்கிவிட்டான்.

கண்விழித்து பார்க்கும்போது, அவன் படுத்திருந்த கட்டிலில் அமர்ந்தவாறு கண்ணாடித்தாத்தா விசிறியால் வீசிக்கொண்டிருந்தார். அவரைப்பார்த்ததும் மிரட்சியில் எழ ஆரம்பிக்க, ‘கிஷ்ணா, தெரியாம பண்ணிட்டம்பா! அந்த சுண்ணாம்பு டப்பா உன் பாட்டியோடது, அவ ஞாபகமா வெச்சிருந்தேன், அத தூக்கிப்போட்டுட்டியே... அதனாலதாம்பா கோவப்பட்டு அடிச்சிட்டேன், என்ன மன்னிச்சிடுப்பா’ என்று சொல்ல அவனுக்கு புரிந்ததோ இல்லையோ மன்னிப்பு கேட்டுவிட்டதாய் எண்ணி சமாதானமானான். ஆனாலும் அந்த சுண்ணாம்பு டப்பா அவருக்கு நிறைய முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புரிந்தது.

அடுத்தநாள் பள்ளி சென்று வீடு திரும்பிய கிருஷ்ணன் பக்கத்தில் இருந்த கிணற்றில் வேலை நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். கயிற்றினை கட்டி இறங்கி மோட்டாரினை இறக்கி வைக்க அவனது மாமா இன்னும் இரண்டு பேரோடு வேலை செய்துகொண்டிருந்தார். கிணற்றில் இறங்கும்போது அவரிடம் கெஞ்சி கூத்தாடி தூக்கி எறிந்த திசையில் இருந்த திட்டில் தேடச்சொல்ல அந்த சுண்ணாம்பு டப்பாய் கிடைத்துவிட்டது.

அதை வாங்கிக்கொண்டு போய் சந்தோஷமாய் கண்ணாடித்தாத்தாவிடம் போய் தருவதற்கு தேட அவரைக் காணாமல் பாட்டியைக் கேட்க, ‘அந்த கடங்காரன் எங்க போனான்னு தெரியல, டீ குடிக்கிறதுக்கு சரியா வந்துடுவான்’ என சொன்னார்கள்.

வந்தவுடன் அவரிடம் தர, அதைப்பார்த்து அவரின் கண்களில்தான் எத்தனை சந்தோஷம்! ஆனந்தக்கண்ணீரோடு அவனை அப்படியே ஆர்த்துக்கொண்டார். அங்கே புரிந்த இரு உள்ளங்கள் சங்கமித்தன.

18 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஜில்தண்ணி said...

ம்ம்ம் நல்லா இருக்கு
அந்த தாத்தாவின் பாத்திரம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லா இருக்கு. எனக்கு தாத்தாவுடன் பழகிய நாட்கள் நியாபகமே இல்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

சத்ரியன் said...

பிரபா,

உண்மையில் சிறப்பாக இருக்கிற்து.

(ஆனா ஒரு விசயம், உங்களுக்கு வயசாயிடுச்சிங்கிறதால்... எப்பப் பாத்தாலும் தாத்தாங்களோட கதையே சொல்லிக்கிட்டிருந்தா... பேராண்டிங்க எங்களுக்கு கஷ்டமா இருக்காதா? )

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உண்மையச்சொல்லுங்க..

உங்க ஊர் வாக்காளர் அட்டைய வெச்சுக்கிட்டு , பதிவ போடறீங்களா?..

சும்மா டமாசு.. ஹி..ஹி

settaikkaran said...

சிறிய சுண்ணாம்பு டப்பாவுக்குள் வாழ்ந்த காலத்தின் சுவடுகள் காயாமல் ஈரமாய் வைத்திருந்த தாத்தா....! அழகாகச் செதுக்கிய கதாபாத்திரம்!

vasu balaji said...

காலையில் பதிவில் நுழைய, வாழ்க்கை வாழ்வதற்கேயில் புது இடுகை கண்ணில் பட, உடனே சொடுக்க, முதல் வரியில் கிருஷ்ணன் பேர் பார்க்க, இந்த கிருஷ்ணன் கொசுக்கடி தாங்கலப்பா என்று அசரீரி சொல்ல, மேலெ படிக்கத் தொடங்க, கண்ணாடித் தாத்தாவை படாத பாடு படுத்திய கிருஷ்ணன் மேல் கோபம் வர, சுவாரசியமாய் படிக்க, தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டுப் போட, பின்னூட்டம் க்ளிக் செய்து பின்னூட்டம் போட..

நல்லாருக்கு பிரபா. மவனே அந்த கிருஷ்ணன் கையில சிக்குனான் சின்னா பின்னம்தாண்டியேய்.

Unknown said...

நல்லாருக்கு பிரபா..

கலகலப்ரியா said...

vote and joot... appaala padichukkarennaa... aapees...

ISR Selvakumar said...

திரைக்கதையைப் போன்ற சம்பங்களுடன் எழுதப்பட்டுள்ள கதை! உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். விரைவில் ஏதோ ஒரு தமிழ் சினிமாவில் இந்தக் கதை துணைக் கதையாக வரும்.

ஹேமா said...

பிரபா தள்ளாத வயதானாலும் இளமையின் நினைவுகளை அந்த சுண்ணாம்பு டப்பாவுக்குள் வைத்திருக்கும் தாத்தா ஒருகணம் என் தாத்தாவையும் நினைக்க வைத்துவிட்டார்.

Anonymous said...

சில பொருட்களுக்கு செண்டிமெண்டல் வேல்யூதானே அதிகம். நல்ல கதை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர்.. அந்தத் தாத்தா மனதில் ஒட்டிக் கொள்கிறார்.

Cable சங்கர் said...

அண்ணே இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ..:)

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் அண்ணனுக்கு குசும்ப பார்த்திங்களா?? உங்க எழுத்து நடை மாதிரியே எழுதி இருக்காரு... :-))


//நல்லாருக்கு பிரபா. மவனே அந்த கிருஷ்ணன் கையில சிக்குனான் சின்னா பின்னம்தாண்டியேய்.//

இதை நானும் ரிப்பீட்டிக்கிறேன்... :-) மொதல்ல இந்த கிருஷ்ணனை தேடிப் பிடிக்கனும்பா...

ரோஸ்விக் said...

//பட்டாபட்டி.. said...
உண்மையச்சொல்லுங்க..

உங்க ஊர் வாக்காளர் அட்டைய வெச்சுக்கிட்டு , பதிவ போடறீங்களா?..

சும்மா டமாசு.. ஹி..ஹி
//

பட்டா... ஓட்டு போடுறதுக்கு மட்டும் தான் வாக்காளர் அட்டையின்னு நினைச்சேன். எப்பவுல இருந்துயா பதிவு போடுறதுக்கும் வாக்காளர் அட்டையை வச்சிருக்கனும்னு முடிவு பண்ணாய்ங்க?? :-)

நாடோடி இலக்கியன் said...
This comment has been removed by the author.
நாடோடி இலக்கியன் said...

சுவாரஸ்யமான நடை.இதுவும் உங்களின் அனுபத்தில் ஒன்றாக இருக்கலாம் ஆனால் சிறுகதை என்று லேபிள் இருப்பதால் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம் பிரபா.

காரணம் அருமையான கதைக்கான கருவும் கதாபாத்திரங்களும் இயல்பாய் கிடைத்தும் வழக்கமான உங்களின் அனுபவக் கட்டுரை போன்றே அமைந்துவிட்டது.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB