மாமாவுக்கு ஐம்பது...

|

கடவுள் எல்லோரோடும் இருக்க முடியாது என்பதால் தாயைப் படைத்தான் என்று சொல்லுவார்கள். ஆசானாக வாழ்க்கை முழுதும் வழிநடத்தும் ஒரு உறவாக தாய்மாமனைப் படைத்திருக்கக் கூடும் என நினைக்கிறேன்.

ஆம்! என் தாய்மாமாவோடு தாத்தா வீட்டில் தங்கியிருந்த அந்த ஒரு வருடம் என் வாழ்க்கை ஒரு களர் நிலத்தை விளை நிலமாக்கியதற்கு ஒப்பானது. நினைவு தெரிந்த நாள் முதல் நல்லதோர் நண்பனாகவும் அவருடனான என் நெருக்கம் என் வாழ்வின் மிகப் பெரிய வரம்.

நான்காவது படிக்கும் சமயம். காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் படுக்கையை விட்டு எழுந்து, பாயினை சுருட்டி வைத்துவிட்டு சோப்பு, துண்டு என எல்லாம் எடுத்துக்கொண்டு அவரின் பின்னால் ஆட்டுக்குட்டி போல் தொடர்வேன், சொல்வதைக்கேட்டும், சந்தேகங்களை நிவர்த்தி செய்தும்.

காட்டுக்கு சென்று, ஏரிக்கரையில் காலைக்கடன்களை முடித்துவிட்டு அவர் ஒடித்துத்தரும் வேப்பங்குச்சியில் பல் துலக்கி, மோட்டார் கொட்டாய்க்கு வந்து இறைத்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் குளிக்க ஆரம்பிப்போம்.

எனக்கு உடல் முழுதும் சோப்பு போட்டு குறிப்பாய் முகத்தில் நன்றாய் தேய்த்து கண்களை திறக்காதவாறு செய்து அருகில் இருக்கும் கரும்புக்காட்டில் சுற்றி விட்டுவிடுவார். தண்ணீர் தொட்டிக்கு தேடி வர ஓரிரு நிமிடங்கள் ஆகும். தொட்டியில் என்னை முக்கி, நன்றாக குளிக்க வைத்து தலை துவட்டி சூரியன் மெதுவாய் தலைகாட்டும்போது வீட்டினை நோக்கி செல்வோம்.

தலைக்கு எண்ணெய் வைத்து, சீவி பள்ளிக்கு அனுப்பி வைப்பார். இதற்குள் பளிச் பளிச்சென்று நான்கு அறைகளாவது வாங்கியிருப்பேன் ஏதேனும் தவறு செய்து. இதற்கு அவரிடம் நிறைய கேள்விகளைக் கேட்டு, அதற்கு பொறுமையாய் புரியும்படி விளக்கியும் மறுநாள் திரும்பக் கேட்கும்போது சொல்லாததுவே காரணமாயிருக்கும்.

பள்ளியில் வைக்கும் தேர்வினைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் வாராந்திரத் தேர்வு, மாதாந்திரத் தேர்வு என வைத்து என்னை தயார்ப் படுத்துவார். நூலகத்தில் புத்தகங்களை எடுத்துவந்து கொடுத்து என்னை படிக்கச்சொல்லி, அது பற்றி விவாதிக்கவும் செய்து படிக்கும் வேட்கையை அதிகப்படுத்தினார். நல்ல படங்களுக்கு என்னை அழைத்துச்சென்றும், பல வரலாற்றுக் கதைகளையும் சொல்லுவார்.

மாலையில் அவர் எனக்கு பாடம் நடத்தும்போது தான் ஒரே களேபரமாக இருக்கும். சரியான அடி விழும். வெளியில் ஆயா தாத்தா ‘ஊராமூட்டு புள்ளைய ஏன் இப்படி அடிக்கனும், எதுக்கு வம்பு’ என புலம்பிக் கொண்டிருப்பார்கள். மாமா சொல்லும் ஒரே பதில், ’அவன் நல்லதுக்காகத் தான் செய்கிறேன், இது அவனுக்கும் தெரியும்’. ஆம் எவ்வளவு அடித்தாலும் அடுத்த நிமிடமே மாமா என அவரிடம் ஒட்டிக்கொண்டு விடுவேன்.

என்னை விட்டு ஒரு நாளும் சாப்பிட்ட மாட்டார். முதலில் பிரபுவுக்கு கொடுங்கள் என சொல்லுவார். நிறைய அடி வாங்கினால் ஆத்தூருக்கு அழைத்து சென்று ஆரியபவன் ஸ்வீட்சில் நல்ல கவனிப்பு இருக்கும்.

’நான் பகலெல்லாம் அடிப்பதை இரவு புரண்டு புரண்டு படுத்து உதைத்து பழி வாங்கி விடுகிறான்’ என சொல்லுவார். ஆம், படுக்கும்போது அவர் அருகில் தான் படுத்துக்கொள்வேன்.  பள்ளி விட்டு வந்ததும் பையினை வைத்துவிட்டு ‘ஆயா, மாமா எங்கே?’ என்பது தான் என் முதல் கேள்வியாயிருக்கும். ’ம்..., ஊருக்கு போயாச்சு, கல்யாணம் கட்டிகிட்டாச்சு’ என விளையாட்டாய் சொல்லும்போது அழ ஆரம்பிக்க, ‘ம்... என்ன அடிச்சாலும் அவன்கிட்டயேதான் நீ ஒட்டிகிட்டிருக்கிற’ என சொல்லி காட்டில் தண்ணீர் கட்டிக்கொண்டிருப்பதாய் சொல்லுவார், சந்தோஷித்து அவரை நோக்கி ஓட ஆரம்பித்துவிடுவேன்.

கடிதம் எழுதக் கற்றுத்தந்து அவருக்கு நடக்கும் எல்லா விஷயங்களையும் கடிதம் மூலம் பகிரச் சொல்லி எனது எழுதும் ஆற்றலை வளர்த்தார். ஒருமுறை கிணற்றில் ‘குட்பால்’ விழுந்து விட்டது என கடிதத்தில் எழுத, எழாவது படிக்கிறவன் இது கூட தெரியாதா ‘ஃபுட் வால்வ்’ என திட்டி பதில் அனுப்பினார்.

ஆங்கிலத்தில் கடிதம் எழுதச் சொல்லி ஒவ்வொரு மடலுக்கும் தவறுகளை திருத்தி பதில் அனுப்புவார். தமிழில் வெண்பா, சிறுகதைகள், கவிதை என எழுதுவார். ஆங்கிலத்திலும் அருமையாய் கவிதைகள் எழுதுவார். பல விஷயங்கள் அவரைப்பார்த்துத் தான் இன்றும் செய்கிறேன். தமிழ் தவிர்த்து அழகாய் ஆங்கிலம், இந்து, உருது, மலையாளம் என பல பாஷைகளை பேசுவார்.

ஆங்கிலம் படிப்பது, அடிப்படை என சொல்லித்தந்தது அவர்தான். இந்தி படிக்க, எழுத தூண்டுகோலாய் இருந்தது அவர்தான். இன்று வலைப்பூவில் எழுதுவதற்கு மூல காரணமாயும், முதல் வாசகராயும் இருந்தும் ஊக்குவிப்பதும் அவர்தான்.

சிறு வயதில் கடவுளிடம் வேண்டும்போது ‘என்னை மாமாபோல் அறிவாளியாய் ஆக்கும்படி வேண்டுவேன்!’ கடவுள் என் வேண்டுகோளில் கொஞ்சம் ஏற்றிருப்பதால் தானோ என்னவோ என்னால் இன்றளவும் கொஞ்சம் எழுத முடிகிறது. அவரைப்பற்றி இன்னமும் நிறைய எழுதலாம். இடுகையின் நீளம் கருதி சுருக்க முடித்துக்கொண்டு அவர் சம்மந்தப்பட்ட பல விஷயங்களை அவ்வப்போது வரும் நாட்களில் பகிர்ந்துகொள்கிறேன்.

வாழையடி வாழை என்பது, இன்று மாமாவின் மகன் அருண் என்னோடு ஒட்டுதலாயும், என் மகன் விஷாக் அருணோடு ஒட்டுதலாய் இருப்பதைப் பார்க்கும்போது தான் தெரிகிறது.

என் நட்பாய், ஆசானாய், என்னை வழிநடத்தும் அன்பு மாமா சம்பத்குமார் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளான இன்று இந்த இடுகை மூலம் வாழ்த்துவதில் மிகப் பெருமையடைகிறேன்.

இன்னும் அவரிடம் படிக்க வேண்டியது ஏராளம். கற்றுத் தருவதிலோ அவர் தாராளம். எல்லாம் வல்ல இறைவனின் அருளோடு பல்லாண்டு வாழ்ந்து எம்மைச் செம்மைப் படுத்த உங்களோடு இறைவனை வேண்டுகிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துகளும், நெஞ்சம் நிறைந்த நன்றிகளோடு வணக்கமும் மாமா.

Many more happy returns of the day. Happy birth day.

கிறுக்கல்கள் என ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இன்னும் தொடராமல் இருக்கிறார், வேலைப்பளுவின் காரணமாய். அவரைக் காண இதை சொடுக்குங்கள், இதிலிருக்கும் விவரங்கள் அவரைப்பற்றி சொல்லும்...

28 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ம்ம். எனக்கும் ஒரு தாய்மாமா இருக்காரே. எச்சிக் கையால் காக்கா கூட ஓட்டமாட்டார் . ஆனால் நான் உங்க மாமா மாதிரிதான் என் அக்கா பசங்களிடம் இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன்.

செ.சரவணக்குமார் said...

நல்ல இடுகை பிரபா. உங்கள் அன்பான தாய்மாமாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

மிகவும் ரசித்து படித்தேனுங்க..மாமா வாழ்க.

புலவன் புலிகேசி said...

தல அன்பான அந்த மாமாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்...

prince said...

convey my birthday wishes to your beloved uncle...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நிறைய அடி வாங்கினால் ஆத்தூருக்கு அழைத்து சென்று ஆரியபவன் ஸ்வீட்சில் நல்ல கவனிப்பு இருக்கும்.
//

ரொம்ப ஸ்வீட் சாப்பிடுவீங்களோ?..
அப்படியே நீங்க மற்றும், உங்க மாமா, போட்டோவை போட்டிருக்களாமே..!!

Unknown said...

மாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அந்த மாமாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

vasu balaji said...

வெகு சிலருக்கு வாய்க்கும் அருமையான உறவு இது. உங்களோடு அவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகளும். நல்ல நனவோடை பிரபா.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நானும் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன் பிரபாகர். நிறைய அடி வாங்கியிருப்பீங்க போல??

Chitra said...

உங்கள் மாமாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்கள் இடுகைகளில், உறவு முறைகளின் உன்னத அன்பை அருமையாக விவரித்து சொல்லும் விதம் அழகு.

க.பாலாசி said...

மாமா ஒரு மகத்துவம்.... நல்ல பகிர்வு... நம்ம மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

Punnakku Moottai said...

உங்கள் மாமாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பல்லாண்டு வாழ்க என்று உங்களோடு நானும் இறைவனை வேண்டுகிறேன்.

settaikkaran said...

உறவுகள் எல்லாம் இன்றைய சூழலில் சிதறிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிற காலகட்டத்தில், பாசப்பிணைப்பின் எடுத்துக்காட்டாய் விளங்கும் உங்கள் மாமாவுக்கு எனது வாழ்த்துகள்! மருமகனுக்கு எனது பாராட்டுகள்! உறவினரோடு பின்னிப்பிணைந்திருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்! வாழ்க வளமுடன்!

பனித்துளி சங்கர் said...

கிராமங்களில் வசிக்கும் ஒவ்வொருவரின் இளமைப் பருவமும் இதுபோன்ற பல அழகான நிகழ்வுகளை கடந்து வந்ததாகத்தான் இருக்கும் . உங்களின் கடந்த நிகழ்வுகள் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

ஹேமா said...

பிரபா மாவுக்கு என் அன்பு வணக்கங்கள்.பதிவு உறவின் பாசத்தின் நெருக்கத்தை நெகிழவைக்கிறது.இப்படி ஒரு மாமா வாழ்வில் அதிஸ்டம் செய்திருக்கிறீர்கள்.
உங்களுக்கும் பாராட்டுக்கள்.

பிரபா...எங்கே ரொம்ப நாளாச்சு என் பக்கம் வந்து.வரலாமே !

ராஜ நடராஜன் said...

தாய் மாமன்களுக்கு வணக்கங்கள்.

ஈரோடு கதிர் said...

சம்பத் மாமாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

ஈரோடு கதிர் said...

போனிலும் அழைத்து வாழ்த்துச் சொல்லிவிட்டேன்....

தெய்வசுகந்தி said...

மாமாவுக்கு வாழ்த்துக்கள்!!!!

ரோஸ்விக் said...

மாமாவுக்கு வாழ்த்துக்கள்.

இப்ப தான் தெரியுது ஆரியபவன் ஸ்வீட் கடைகாரரு எப்படி வீடு, கார் எல்லாம் வாங்குனாருன்னு.... :-)))))

கிறுக்கல்கள்/Scribbles said...

வாழ்த்திய உள்ளங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.தொலைபேசியில் அழைத்து வாழ்த்திய கதிருக்கு என் அன்பு உரித்தாகுக.பிரபுக்கு ஆசிகள்

கண்ணகி said...

நல்லா பயிற்சி கொடுத்திருக்கார் மாமா....வாழ்த்துக்களை மாமாவிடம் சொல்லுங்கள்..

சத்ரியன் said...

பிரபா,

நல்ல மாமா ! அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துவிடுங்கள்.

கலகலப்ரியா said...

மாமாவுக்கு என்னோட நமஸ்காரங்கள் அண்ணா..

saravanakumar sps said...

best wishes

பிரபாகர் said...

என் அன்பான மாமாவுக்கு வாழ்த்துக்களை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! உங்களின் அன்பிலும் உயர்ந்த ஏதேனும் ஒன்று இருக்கிறதா என்ன?

பிரபாகர்...

Thulasi said...

இதை படிக்கையில் எனக்கு ஒரு தாய் மாமன் இல்லாமல் போய்விட்டதே என்ற ஏக்கம்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB