அக்கோண்டு தாத்தா...

|

அவரை எல்லோரும் கூப்பிடுவது அக்கோண்டு எனத்தான். அவர் வயசுக்காரர்கள் அக்கோண்டு, நடுத்தர வயதுடையவர்கள் அக்கோண்டு அய்யா, அக்கோண்டு மாமா, வாண்டுகளாகிய நாங்கள் அக்கோண்டு தாத்தா. அவருக்கு ஏன் அந்த பெயர் என எவருக்குமே தெரியாது, ஒருமுறை கேட்கும்போது அவருக்குகூட. ஆயாவிடம் கேட்டதற்கு அவரின் உண்மையான பெயரை சொன்னார்கள், பழனிமுத்து என.

குள்ளமாக, கருப்பும், மாநிறமும் இல்லாமல் ஒரு புது கலரில் இருப்பார். எண்ணை வைத்து முடியை தூக்கி வாரி சீவி, குடித்திருக்காத சமயங்களில் காலருக்குக் கீழே கர்சீப் வைத்து சட்டை போட்டு வேஷ்டியினை மடித்துக் கட்டியிருப்பார். குடித்திருந்தால் சட்டை இன்றி டிராயரோடும் வேஷ்டி அவருடைய தலையிலும் இருக்கும். பெரும்பாலும் சாராய வாசத்தோடும், கணேஷ் பீடியை குடித்த வண்ணம்தான் இருப்பார். (யாரு கணேஷா? மங்களூர் கணேஷ் பீடிங்க... ரொம்ப பேமஸ் இன்னமும் நம்ம ஏரியாவுல).

அவர் கல்யாணம் செய்துகொள்ளவே இல்லை. அவரின் வீடு எங்கள் வீட்டின் எதிர் சந்தில் இருக்கும். முன்புறத்தின் அவரின் அண்ணன் வீடு. பின்புறம் அவருக்கான பாதி பாகத்தில் ஒரு சிறிய கூரை வீடு.

அந்த வீட்டில் தான் பெரும்பாலும் தங்குவார். இருக்கும்போது மட்டும்தான் விளக்கெரியும். இல்லாத தருணங்களில் எங்களுக்கு ஒளிந்து விளையாட, திரை கட்டி பொம்மலாட்டம் நடத்த என மிகவும் உதவியாயிருக்கும். மேலே பரண் இருக்கும். ஒளிந்து விளையாட அற்புதமான இடம்.

வெளியூர் சென்று கஷ்டப்பட்டு சம்பாதித்து கையில் பணத்தோடு வந்து அண்ணாவின் குடும்பத்துக்கு கொஞ்சம் கொடுத்துட்டு மீதியை என் அம்மாவிடம் கொடுத்து வைத்துவிடுவார்.

தினமும் சாராயம் சாப்பிட்டுவிட்டு இரவில் சரியான அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்துவிடுவார். கணீரென பாட்டுப் பாட ஆரம்பிக்க கச்சேரி களைக்கட்ட ஆரம்பித்துவிடும். தெருக்கூத்தில் என் தாத்தா துரியோதனனாகவும், அவர் பாஞ்சாலியாகவும் வேடமிட்டு நடித்ததை சொல்லி, வேட்டியினை சீலையாய் கட்டிக்கொண்டு தாத்தாவைப் பார்த்து பாஞ்சாலி துகிலுரியும் காட்சியைப் பற்றி பாட்டோடு நடித்துக்காட்ட ஆரம்பித்துவிடுவார். பதிலுக்கு தாத்தாவையும் பாட வற்புறுத்துவார். தாத்தா 'போடா அக்கோண்டு' என மறுத்துவிடுவார், அல்லது அவரும் பாட ஆரம்பித்துவிடுவார். தாத்தாவிடம் ஒருநாள் , 'பாஞ்சாலி அவ்ளோ குள்ளமாவா தாத்தா இருக்கும்' எனக் கேட்டேன்.

உள்ளூரில் எங்கேயும் வேலைக்குப் போகமாட்டார்.. காசெல்லாம் தீரும் வரை சாராயம், தாயம், பீடி என சந்தோஷமாய் இருப்பார். ஓட்டல், அண்ணன் வீடு, எங்கள் வீடு என சாப்பிட்டுவார். அவர் காசு கொடுத்த சில நாட்களுக்கு அவரின் அண்ணன் வீட்டில் நல்ல கவனிப்பு இருக்கும், பிறகு பாட்டுப்பாட ஆரம்பித்துவிடுவார்கள்.

அம்மாவிடம் கொடுத்து வைத்திருக்கும் காசினை வாங்கி சில நாட்களை ஓட்டுவார். எல்லாம் காலியான பிறகு, 'அய்யா, நீங்க கொடுத்த காசையெல்லாம் கொடுத்துட்டேன், இதுக்கப்புறம் தர்றதுக்கு காசில்ல' என அம்மா ஒரு எச்சரிக்கை செய்வார்.

'சரிம்மா, இதுக்கப்புறம் இங்க இருந்தா மரியாத இல்ல, அடுத்த வாரமே கெளம்பிடறேன், செலவுக்கு மட்டும் நூறு ரூவா கொடு' எனச் சொல்லி அதேபோல் ஓரிரு வாரத்தில் கிளம்பிவிடுவார்.

எனக்கு அந்த தாத்தாவை பிடிக்கவே பிடிக்காது, எப்பொழுதும் பீடி, சாராய நாற்றத்துடன் இருந்ததால். அம்மாவிடம் திட்டிக்கொண்டே இருப்பேன். பீடி வாங்கி வருவதற்கு எல்லா பையன்களையும் அனுப்புவார், என்னைத் தவிர. நான் போகிறேன் தாத்தா என சொன்னாலும், 'அய்யோ, நீயெல்லாம் போகக்கூடாது என் மவளோட மவன்' என மறுத்துவிடுவார். (பத்து பைசாவுக்கு எது வேண்டுமானாலும் வாங்கிகொள்ளலாம் என்பது எழுதப்படாத விதி) அதுவம் வெறுப்புக்கு ஒரு காரணமாய் இருக்கலாம். அவர் போதையில் இருக்கும்போது அவரை கண்டபடி திட்டுவோம், குச்சியால் அடிப்போம், கண்டுக்கொள்ளவே மாட்டார்.

அன்று என்ன காரணம் என தெரியவில்லை, அரை நேரத்தோடு பள்ளிக்கு விடுமுறை. வீட்டில் யாரும் இல்லாததால் எல்லோருமாய் சேர்ந்து சந்தோஷமாய் விளையாடிக் கொண்டிருந்தோம். ஒளிந்து விளையாடும் போது மட்டிக்கொள்ளப் போகிறான் என என் தம்பியை நெல் கொட்டி வைக்கும் சேரில் (தனியாய் நெல் சேமித்து வைக்க கட்டி வைத்திருப்பார்கள்) பிடித்து தள்ளிவிட்டு விட்டேன்.

உள்ள இருந்து வீல், வீல் என என் தம்பி கதற, நான் என்ன செய்ய என பதறித் தவிக்க, சத்தம் கேட்டு அக்கோண்டு தாத்தா வேகமா ஓடி வந்து சேரில் ஏறி அவனை உள்ளே இருந்து தூக்கினார். தம்பியின் கை முறிந்து வலியில் இன்னமும் கதறி, மறக்காமல் 'அண்ணன்தான் என்னை தள்ளிவிட்டுச்சி' என மாட்டிவிடவும் முயற்சி செய்தான்.

வெளியில் நின்ற பூட்டுப்போட்டிருந்த மாமாவின் சைக்கிளை உடைத்து, என்னை பின்னால் உக்காரச் சொல்லி தம்பியை மடியில் வைத்து பிடித்துக்கொள்ள சொன்னார். வேக வேகமாய் மிதித்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்குமரை என்னும் ஊருக்கு அழைத்துக்கொண்டு போனார்.

மாவுக்கட்டுப்போட்டு எங்களுக்கு டீ, வடை என எல்லாம் வாங்கித்தது, திரும்ப வீட்டில் கொண்டு வந்து விட்டார். தம்பியிடம், 'திவா, நீயே விழுந்துட்டேன்னு சொல்லு, அண்ணன் பாவம், தெரியாம பண்ணிட்டான், உனக்கு வேணுங்கறத வாங்கித்தர்றேன்' என சமாதானப் படுத்தினார்.

தம்பி சொல்வதையெல்லாம் இரண்டு நாளைக்கு கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியமாய் 'என்னடா உங்களுக்குள்ள இவ்வளவு ஒற்றுமை' என அப்பா கேட்க, குட்டு வெளிப்பட்டது. ஆனாலும் விஷயம் பழசானதால் அடி வாங்காமல் திட்டோடு தப்பித்தேன்.

இதற்குப்பின் அக்கோண்டு தாத்தா மேல எனக்கு ஒரு தனி மரியாதை. சொல்வதை அப்படியே கேட்பேன், பாசமாய் இருப்பேன். அதன் பிறகு அவரிடமிருந்து வரும் சாராய 'வாசம்' என்னை பாதித்தது இல்லை.

அதன் பிறகு அவர் ரிக் வண்டியில சமைல்காரராக போனதாக தகவல் வந்தது. நெடு நாட்கள் வரவேயில்லை. கடைசியாய் கண்காணாத ஏதோ ஒரு இடத்தில் இறந்து, அங்கேயே புதைத்துவிட்டதாய் தகவல் மட்டும் வந்தது.

இன்றும் சைக்கிளைப் பார்க்கும்போது, குள்ளமான அவர் சைக்கிளில் சரியாக கால் கூட எட்டாமல், எங்கள் இரண்டு பேரையும் வைத்து வேக வேகமாய் மிதித்துக்கொண்டு போனது நினைவிற்கு வந்து மனதை கொஞ்சம் இடறச்செய்யும்.

24 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

settaikkaran said...

அக்கோண்டு தாத்தா செமத்தியான கேரக்டர்! இந்த மாதிரி பெருசுங்க ஒவ்வொரு ஊரிலேயும் இருப்பாய்ங்க போலிருக்கே! :-))

சத்ரியன் said...

// தாத்தாவிடம் ஒருநாள் , 'பாஞ்சாலி அவ்ளோ குள்ளமாவா தாத்தா இருக்கும்' எனக் கேட்டேன்.//

இதத்தான் ஓவர் குசும்பு-ன்னு பெரியவங்க சொல்லுவாங்க..!

vasu balaji said...

இப்படி வெள்ளந்தி மனிதர்கள் கிராமத்திலும் கூட அருகி வருகிறார்கள். அக்கோண்டு:(

Anonymous said...

//அக்கோண்டு தாத்தா செமத்தியான கேரக்டர்! இந்த மாதிரி பெருசுங்க ஒவ்வொரு ஊரிலேயும் இருப்பாய்ங்க போலிருக்கே! :-)) //

Repeateyy !!!

நாடோடி இலக்கியன் said...

//அக்கோண்டு தாத்தா செமத்தியான கேரக்டர்! இந்த மாதிரி பெருசுங்க ஒவ்வொரு ஊரிலேயும் இருப்பாய்ங்க போலிருக்கே! :-))//

பெரிய ரிப்பீட்டே.....

Unknown said...

//
வானம்பாடிகள் said...
இப்படி வெள்ளந்தி மனிதர்கள் கிராமத்திலும் கூட அருகி வருகிறார்கள். அக்கோண்டு:(
//

ரிப்பீட்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அக்கோண்டு தாத்தா என்கிற அந்த கேரக்டரை நன்றாக PORTRAIT செய்து இருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்!!!

க ரா said...

நல்லா எழுதீருக்கிங்க் அண்ணே.

VR said...

நல்லவேளை!
டோண்டு என்று அவசரத்தில் படித்துவிட்டேன்!

VR said...

முகத்தில் ஒரு சிரிப்போடு படித்துக்கொண்டு வந்தேன். கடைசி வரிகளுக்கு வந்த போது நெஞ்சு கனத்து விட்டது.
ஏக்கங்களை போதையில் கரைத்து ........ தனிமை வாழ்வில் தான் எவ்வளவு சொல்ல முடியா சோகம்?

அக்கோண்டு தாத்தாவுக்கு வானத்தை நோக்கி ஒரு வணக்கம்.

ஹேமா said...

ஒவ்வொருவரிடமும் இப்படியான நல்ல குணங்கள் இருக்கத்தான் செய்கிறது பிரபா.வெளிப்படுத்தத்தான் தவறுகிறார்கள்.நீங்கள் சொன்ன விதம் மனதிற்கு நெகிழ்வாய் இருந்தது.

ரோஸ்விக் said...

அக்கோண்டு - Account வச்சு பணம் சேர்த்து / செலவழித்து இருப்பதால், அந்தப் பெயர் வந்திருக்குமோ??

T.V.ராதாகிருஷ்ணன் said...

Arumai Praba

sathishsangkavi.blogspot.com said...

//அக்கோண்டு தாத்தா மேல எனக்கு ஒரு தனி மரியாதை. சொல்வதை அப்படியே கேட்பேன், பாசமாய் இருப்பேன்.//

பங்காளி..

எங்க ஊரீலும் இந்த மாதிரி ஒரு தாத்தா இருக்கிறார்....

உங்கள் பதிவை படித்ததும் எனக்கு அவர் ஞாபகம்...

பனித்துளி சங்கர் said...

/////இன்றும் சைக்கிளைப் பார்க்கும்போது, குள்ளமான அவர் சைக்கிளில் சரியாக கால் கூட எட்டாமல், எங்கள் இரண்டு பேரையும் வைத்து வேக வேகமாய் மிதித்துக்கொண்டு போனது நினைவிற்கு வந்து மனதை கொஞ்சம் இடறச்செய்யும்.///////

உண்மைதான் நண்பரே கடந்துபோன நினைவுகள் மீண்டும் கண்களில் படும்பொழுது . வார்த்தைகள் எதுவும் இன்றி நமது பார்வைகள் மட்டுமே வெகு நேரமாய் அலைமோதிக்கொண்டே இருக்கும் .

பதிவு அருமை .

ஏலே மீண்டும் வருவேன் சைக்கிள் ஓட்ட ஆமா

செ.சரவணக்குமார் said...

அருமையான இடுகை பிரபா. உங்கள் எழுத்தில் அக்கோண்டு தாத்தா மிளிர்கிறார்.

//(யாரு கணேஷா? மங்களூர் கணேஷ் பீடிங்க... ரொம்ப பேமஸ் இன்னமும் நம்ம ஏரியாவுல).//

நம்ம ஏரியாவுல பூ மார்க்கும் கணேஷ் பீடியும் ரொம்ப பேமஸ்ங்க.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல இடுகை. சுவாரஸ்யமான மனிதர் அக்கோண்டு.

//V R said...
நல்லவேளை!
டோண்டு என்று அவசரத்தில் படித்துவிட்டேன்!
//

இது கலக்கல்!!

ஈரோடு கதிர் said...

கடைசியாக மனசு கனத்துப்போச்சு..

ஆமா உங்க ஊர்ல சாரயத்த சாப்பிடுவாங்களா:))))

இங்க அடிப்போம் அல்லது குடிப்போம்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பிரபாகர் said...

//
சேட்டைக்காரன் said...
அக்கோண்டு தாத்தா செமத்தியான கேரக்டர்! இந்த மாதிரி பெருசுங்க ஒவ்வொரு ஊரிலேயும் இருப்பாய்ங்க போலிருக்கே! :-))
//
ஆம் நண்பா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//
’மனவிழி’சத்ரியன் said...
// தாத்தாவிடம் ஒருநாள் , 'பாஞ்சாலி அவ்ளோ குள்ளமாவா தாத்தா இருக்கும்' எனக் கேட்டேன்.//

இதத்தான் ஓவர் குசும்பு-ன்னு பெரியவங்க சொல்லுவாங்க..!
//
ஹி..ஹி...

//
வானம்பாடிகள் said...
இப்படி வெள்ளந்தி மனிதர்கள் கிராமத்திலும் கூட அருகி வருகிறார்கள். அக்கோண்டு:(
//
ஆம் அய்யா!

பிரபாகர் said...

//
நல்லவன் கருப்பு... said...
//அக்கோண்டு தாத்தா செமத்தியான கேரக்டர்! இந்த மாதிரி பெருசுங்க ஒவ்வொரு ஊரிலேயும் இருப்பாய்ங்க போலிருக்கே! :-)) //

Repeateyy !!!
//
நன்றி கருப்பு!

//
நாடோடி இலக்கியன் said...
//அக்கோண்டு தாத்தா செமத்தியான கேரக்டர்! இந்த மாதிரி பெருசுங்க ஒவ்வொரு ஊரிலேயும் இருப்பாய்ங்க போலிருக்கே! :-))//

பெரிய ரிப்பீட்டே.....
//
நன்றி பாரி!

//
முகிலன் said...
//
வானம்பாடிகள் said...
இப்படி வெள்ளந்தி மனிதர்கள் கிராமத்திலும் கூட அருகி வருகிறார்கள். அக்கோண்டு:(
//

ரிப்பீட்
//
நன்றி தினேஷ்!

பிரபாகர் said...

//
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
அக்கோண்டு தாத்தா என்கிற அந்த கேரக்டரை நன்றாக PORTRAIT செய்து இருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்!!!
//
ரொம்ப நன்றிங்க!

//
இராமசாமி கண்ணண் said...
நல்லா எழுதீருக்கிங்க் அண்ணே.
//
ரொம்ப நன்றிங்க!

//
V R said...
நல்லவேளை!
டோண்டு என்று அவசரத்தில் படித்துவிட்டேன்!
//
ஆஹா! அவசரத்துல கூட அந்த தப்ப பண்ணக்கூடாதே!

பிரபாகர் said...

//
V R said...
முகத்தில் ஒரு சிரிப்போடு படித்துக்கொண்டு வந்தேன். கடைசி வரிகளுக்கு வந்த போது நெஞ்சு கனத்து விட்டது.
ஏக்கங்களை போதையில் கரைத்து ........ தனிமை வாழ்வில் தான் எவ்வளவு சொல்ல முடியா சோகம்?

அக்கோண்டு தாத்தாவுக்கு வானத்தை நோக்கி ஒரு வணக்கம்.
//
ஆமாங்க, ரொம்ப பாதிச்சவங்கள்ல அவரும் ஒருத்தர்!

//
ஹேமா said...
ஒவ்வொருவரிடமும் இப்படியான நல்ல குணங்கள் இருக்கத்தான் செய்கிறது பிரபா.வெளிப்படுத்தத்தான் தவறுகிறார்கள்.நீங்கள் சொன்ன விதம் மனதிற்கு நெகிழ்வாய் இருந்தது.
//
நன்றி சகோதரி!

//
ரோஸ்விக் said...
அக்கோண்டு - Account வச்சு பணம் சேர்த்து / செலவழித்து இருப்பதால், அந்தப் பெயர் வந்திருக்குமோ??
//
இப்படியும் இருக்குமோ? என எண்ண வைக்கிறது உங்கள் கருத்து!

பிரபாகர் said...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
Arumai Praba
//
நன்றிங்கய்யா!

//
Sangkavi said...
//அக்கோண்டு தாத்தா மேல எனக்கு ஒரு தனி மரியாதை. சொல்வதை அப்படியே கேட்பேன், பாசமாய் இருப்பேன்.//

பங்காளி..

எங்க ஊரீலும் இந்த மாதிரி ஒரு தாத்தா இருக்கிறார்....

உங்கள் பதிவை படித்ததும் எனக்கு அவர் ஞாபகம்...
//
நன்றி பங்காளி!

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
/////இன்றும் சைக்கிளைப் பார்க்கும்போது, குள்ளமான அவர் சைக்கிளில் சரியாக கால் கூட எட்டாமல், எங்கள் இரண்டு பேரையும் வைத்து வேக வேகமாய் மிதித்துக்கொண்டு போனது நினைவிற்கு வந்து மனதை கொஞ்சம் இடறச்செய்யும்.///////

உண்மைதான் நண்பரே கடந்துபோன நினைவுகள் மீண்டும் கண்களில் படும்பொழுது . வார்த்தைகள் எதுவும் இன்றி நமது பார்வைகள் மட்டுமே வெகு நேரமாய் அலைமோதிக்கொண்டே இருக்கும் .

பதிவு அருமை .

ஏலே மீண்டும் வருவேன் சைக்கிள் ஓட்ட ஆமா

//
நன்றி சங்கர்!

பிரபாகர் said...

//
செ.சரவணக்குமார் said...
அருமையான இடுகை பிரபா. உங்கள் எழுத்தில் அக்கோண்டு தாத்தா மிளிர்கிறார்.

//(யாரு கணேஷா? மங்களூர் கணேஷ் பீடிங்க... ரொம்ப பேமஸ் இன்னமும் நம்ம ஏரியாவுல).//

நம்ம ஏரியாவுல பூ மார்க்கும் கணேஷ் பீடியும் ரொம்ப பேமஸ்ங்க.

//
நன்றி நண்பா!

//
ச.செந்தில்வேலன் said...
நல்ல இடுகை. சுவாரஸ்யமான மனிதர் அக்கோண்டு.

//V R said...
நல்லவேளை!
டோண்டு என்று அவசரத்தில் படித்துவிட்டேன்!
//

இது கலக்கல்!!
//
நன்றிங்க செந்தில்!

//
ஈரோடு கதிர் said...
கடைசியாக மனசு கனத்துப்போச்சு..

ஆமா உங்க ஊர்ல சாரயத்த சாப்பிடுவாங்களா:))))

இங்க அடிப்போம் அல்லது குடிப்போம்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//
அப்பூடித்தான் சொல்லுவோம் எங்க பக்கத்துல கதிர்!

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB