எனக்கு பிடித்த சினிமாக்கள் - கல்லூரிக்குப் பின்

|

இடுகை எழுத அழைத்த நண்பர் முகிலனுக்கு நன்றி...

முதல் பகுதியில் கல்லூரிக்கு முன் என எழுதியதைத் தொடர்ந்து கல்லூரிக்குப்பின் பார்த்த படங்களில் கவர்ந்த சில இந்த இடுகையில்...

முந்தய இடுகையை படிக்கவில்லையெனில், படித்து இதை படியுங்களேன்!

விதிகள்:

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே

2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.

3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)

கல்லூரியில் சேர்ந்தபின் நமது வாழ்க்கை முறையே மாறிவிடும் அல்லவா, முதன் முதலாய் கிடைக்கும் முழுச் சுதந்திரம், நம்பி பெற்றோர் தரும் பணம், கிடைக்கும் புதுப்புது உறவுகள், புதுச் சூழல் ஆகியவைகளால்?...

நாங்கள் நண்பர்கள் ஐவர் ஆளுக்கு நூறு என சேர்த்து திருச்சி சென்றோம். மாரிஸில் இந்திரன் சந்திரன் டிக்கெட் இல்லாததால் கிடைத்த அடுத்த நாள் பதினோரு மணிக்காட்சிக்கு முன்பதிவு செய்துவிட்டு, கலையரங்கத்தில் மாலை ஆறு மணிக்காட்சியாக ரஜினியின் பணக்காரன் பார்த்தோம். ரோட்டோரக் கடையில் சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்காட்சியாக கார்த்திக்கின் இதய தாமரை படத்தை முன் வரிசையில் அமர்ந்து கழுத்து சுளுக்க (கடைசி வகுப்பு டிக்கெட்) பார்த்து இரவு முழுவதும் பஸ் ஸ்டாண்டிலேயே சுற்றிவிட்டு விடிந்தவுடன் நேஷனல் காலேஜில் படிக்கும் எனது நண்பனின் விடுதிக்கு சென்று குளித்து, அருகே இருந்த ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கமலின் இந்திரன் சந்திரன். பின் கிளம்பும்போது, 'மாப்ளே அமலா நடிச்ச உதயம் படம் காவேரியில போட்டிருக்கான்டா அதையும் பாத்துடலாண்டா' என ஒருவன் சொல்ல அதையும் பார்த்துவிட்டு கண்கள் பொங்க சென்றோம்.

மொத்தத்தில் எண்பத்து மூன்று ரூபாய்தான் ஆனது, பஸ் செலவு உட்பட... எதற்காக என்றால் காஞ்சமாடு கம்மங் கொல்லை என்று சொல்லுவார்களே அதுபோல் சினிமா பார்ப்பதையே தொழிலாக இருந்தோம்,வேறு பொழுது போக்குகள் இல்லாததால். சரி முன்னோட்டம் போதும், படங்களைப் பார்ப்போம்...

கரகாட்டக்காரன்

கல்லூரியில் சேர்ந்த சமயத்தில் வந்த படம். ராமராஜனை கிண்டல் செய்தாலும் என்னுடன் படித்த எல்லோருமே பார்த்த படம். பெரம்பலூர் ராஜா தியேட்டரில் வேலைக்கென புதிதாய் இரண்டு பேர் அந்த படத்திற்காக மட்டும், அவர்கள் சாமியாட்டும் பூசாரிகள். தியேட்டரே பக்தி மயமாக இருந்தது, வேப்பிலைக் கொத்து, மாவிலைத் தோரணங்கள், ஒரு சாமி சிலை என. பக்கத்து கிராமங்களில் இருந்தெல்லாம் கூட்டம் பிய்த்துக்கொண்டு வந்தது. எல்லோரும் 'நேத்து பத்து பேருக்கு சாமி வந்ததாம், இன்னிக்கு?' என்பதுதான் பேச்சாயிருந்தது.

ஜனரஞ்சகமாய் எல்லா தரப்பினரையும் கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று. வாழைப்பழம் காமெடி இன்றும் பிரபலமாயிருக்கிறது. (படம் பார்த்தவுடன் 'மாப்ளே, ரெண்டும் எங்கன்னு கேக்கவேண்டியதுதானடா' என அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்க, நீ ஒரு படம் எடுத்து அதுல கேளுன்னு நக்கலாய் பதில் வந்தது). இளைய ராஜா புகுந்து விளையாடிய படங்களில் இதுவும் ஒன்று. அன்றைய கட்டத்தில் பெரும்பாலோனோர் இந்த படத்தை பார்த்திருப்பார்கள். எல்லா பாடல்களுமே அருமையாய் இருக்கும்.

மாரியம்மா, மாரியம்மா என பாடல் ஆரம்பித்தவுடன் ஒரே களேபரம். அங்கும் இங்கும் என சாமியாடித் தீர்த்தார்கள். பூசாரிகள் பயங்கர பிஸி. அப்போது எங்கள் அருகே அமர்ந்திருந்த ஒரு அம்மா சாமியாட ஆரம்பிக்க, ஒருவர் பொளிச்சென ஒரு அறை விட்டார். பொறுக்க முடியாமல் 'யோவ் பொம்பளைய அடிக்கிறியே அறிவிருக்கா' என நான் கேட்க, 'அதெல்லாம் நிறையாவே இருக்கு, சும்மா மூடிக்கிட்டு படம் பாரு, அது என் அம்மாதான், சாமியாடுனா என்னா பண்ணனும்னு தெரியும்' னு சொல்ல, பல்ப் வாங்கி வழிந்தேன். அதன் பிறகு அந்த அம்மா ரொம்ப அமைதியாக படம் முடியும் வரை இருந்தார்கள்.

அந்த வாரம் வந்த ஜூவியில் அடித்தது, நான் கேட்டு பல்ப் வாங்கியது என டயலாக்கில் வந்திருந்தது. இன்றும் அந்த படத்தின் பாடலையோ, ஏதச்சும் ஒரு காட்சியையோ பார்த்தால் மெலிதாக ஒரு புன்முறுவலுடன் இந்த நிகழ்வுகள் மெலிதாய் தோன்றும்.

அஞ்சலி

அப்போது பெரம்பலூரில் இருக்கும் தியேட்டர்களில் ராஜா தியேட்டரில் மட்டும்தான் திரை வெள்ளையாக இருக்கும். ராம் மற்றும் கிருஷ்ணா தியேட்டர் திரைகள் பழுப்புக்கலரில், படம் தெளிவாக தெரியாத நிலையில் இருக்கும். கிருஷ்ணா தியேட்டரில் தான் அஞ்சலி படத்தைப்பார்த்தேன் எனது சீனியர் சுரேஷ் அண்ணாவுடன். எனது பக்கத்து ஊர்க்காரர். அவர் எனக்கு எல்லா விதத்திலும் குருவாக இருந்தார், படிக்க அறிவுறை சொல்லுதல், பாட சந்தேகங்களை நிவர்த்தி செய்தல்... என.

இரவில் வெளியில்தான் படுத்துக்கொள்வோம், அறையில் புழுக்கமாய் இருக்கும் என்பதால். ஹாஸ்டலில் இருந்து பின்பக்க சுவர் வழியாக இறங்கி, இறக்கி இரவு பத்து மணிக்காட்சிக்கு சென்றோம். மணிரத்தினத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அருமையான குழந்தைச் சித்திரம். இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் பல இருந்ததனால் (இந்த படத்தில் ரொம்ப அதிகம்ங்க...) திரை காரணத்தால் சரிவரத் தெரியாமல் குருட்டுப்பூனை இருட்டில் பாய்ந்தார்போல் பார்த்தோம். பிறந்த குழந்தை குறையோடு இருப்பினும் குறைவின்றி அன்பு செலுத்தவேண்டும் என போதித்த படம். குழந்தைகளுக்கிடையே உள்ள மன நிலைகளை பிரதிபலிக்கும் பல காட்சிகள் இதில் அசத்தலாய் இருக்கும்.

இடைவேளையின் போது வெளியில் செல்லக்கூடாது, யாராவது பார்த்து விடுவார்கள் என சீட்டிலேயே   உட்கார்ந்திருக்கச் சொன்னார். படம் முடியும் தருவாயில் முன்னால் ஒருவர் எழுந்து எழுந்து உட்கார, இங்கிருந்து ஒரு பலமாக 'ஒழுங்கா உக்காருய்யா' என சப்தம் செய்தோம். படம் முடிந்து விளக்குகளைப் போடும்போதுதான் தெரிந்தது அது எங்கள் வார்டன் முத்தையன் சார் என. அப்புறமென்ன, முதல் முறையாக படம் பார்த்தபின் கேட் வழியே உள்ளே சென்றோம்

காதலுக்கு மரியாதை

சென்னையில் இருந்த சமயத்தில் ஆழ்வார்பேட்டையில் இருந்த சரத் மியூசிக்கில் தான் கேசட்டுகளை பதிவு செய்வது வழக்கம். கடையின் முதலாளி இந்த படம் வெளியான சமயத்தில் சொன்ன ஒரு விஷயம், வாழ்வில் அதிகமாய் ரெக்கார்ட் செய்து கொடுத்தது 'என்னை தாலாட்ட வருவாளா' எனும் இப்படத்தின் பாடலைத்தானாம். என் வாழ்வின் சில முடிவுகளை எடுக்கவும் உதவிய படம். இன்றைய சூழலில் திரும்ப பார்க்கும்போது கொஞ்சம் தொய்வு இருக்கலாம். அப்போது மிக மிக கவர்ந்த படம். அதில் வரும் சிவக்குமார், ஸ்ரீவித்யா பாத்திரங்கள் எனது பெற்றோரை பெரிதும் நினைவுறுத்தும்படி இருந்ததாலும் என்னை மிகவும் கவர்ந்து இருக்கலாம். நல்லதொரு எதிர்ப்பாராத முடிவுடன் கலக்கிய படம்.

ஈரம்

வார இறுதியில் என் நண்பர் முரளி டிக்கெட் எடுத்து வைத்து அழைக்க அவசர அவசரமாய் வாசிங் மெஷினில் துணியினைப்போட்டு வேக வேகமாக சென்று சிங்கையில் பார்த்த ஒரு அருமையான சஸ்பென்ஸ் திரில்லர். படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை எங்கேனும் ஈரமாயிருக்கும்படி காட்சிகள் இருக்கும். ஒளிப்பதிவு ஆங்கிலப்படத்துக்கு இணையாய் இருக்கும். ரசித்து பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து கிச்சனுக்குள் போனால் ஒரே வெள்ளக்காடு. வாஷிங் மெஷினிலிருந்து வெளியே செல்லும் பைப்பை சுருட்டி உள்ளே வைத்துவிட்டு பாத்ரூமை சுத்தம் செய்தபின் உள்ளே வைக்காமல் விட்டுவிட, அதன் பின் எல்லாம் சரி செய்ய படம் பார்த்ததை விட அதிக நேரம் ஆயிற்று. அப்போது வீட்டிற்கு வந்த என் நண்பன் கேட்டான் 'என்னடா வீடெல்லாம் ஈரமாயிருக்கு' என்று. 'ஈரம் படம் பார்த்தேன் அதான்' என சொன்னேன்.

அங்காடித்தெரு

கடைசியாய் பார்த்து மனதுள் உறைந்திருக்கும் படம். ஏற்கனவே இடுகை நீளமாகிக்கொண்டு போகிறது, இதன் விமர்சனத்தை என்னுடைய இன்னொரு வலைப்பூவில் படித்துவிடுங்களேன்...

இதனை தொடர அழைப்பது

அருமைத் தம்பி ரோஸ்விக்
அன்புத் தம்பி பட்டாப்பட்டி
ஆருயிர் அண்ணன் ஆரூரன்

28 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

வித்தியாசமான நனவோடை. சபாஷ்:)

சத்ரியன் said...

அப்பன் வீட்டு காசுல அங்க இங்க சுத்தி படம் பாத்ததும் இல்லாம, இளமைக்கால வரலாறு பக்காவா பதிவு பண்ணி வெச்சி, எங்களையெல்லாம் படிக்க வெச்சி.... ஜமாய்ங்க.

Unknown said...

//வித்தியாசமான நனவோடை. சபாஷ்:)//

ரிப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்

Unknown said...

ஃபோட்டோ கமெண்டை, நான் மட்டும் டிவி பாக்கக்கூடாதாம்னு மாத்துங்க.. :))

settaikkaran said...

கரகாட்டக்காரன் படத்துலே இவ்வளோ சமாச்சாரம் இருக்கா...? அசத்தல்...!
எளிமையான நடையில், வித்தியாசமான, இரத்தினச் சுருக்கமான தொகுப்பு..!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இந்த ஐந்தும் கலக்கல்.

அஞ்சலி, கரகாட்டக்காரன்,ஈரம் என்னுடைய கலெக்ஷனில் இருக்கும் படங்கள். அழகான தொகுப்பு உங்கள் நினைவுகளுடன்.. :)

மங்குனி அமைச்சர் said...

good selection

ரோஸ்விக் said...

ஆஹா மாட்டிவிடுறாரே! ... நான் அதிகமா படங்களே பாக்குறதில்லையே அண்ணே!

இந்த பரீட்சைக்கு படிக்க கொஞ்சம் டயம் வேணும். :-))

Anonymous said...

அண்ணே,
எப்படியோ அப்பா கொடுத்த காசுல எல்லாப்படத்தையும் பாத்துட்டு...."வரலாறு முக்கியம் அமைச்சரேன்னு" பதிவா போட்டுட்டீங்க...
என்ஜாய் பண்ணுங்க.....
ரெண்டு பதிவும் நல்லா இருக்கு....

நல்லவன் கருப்பு...

Prathap Kumar S. said...

தலைவர் ராமராஜனின் கரகாட்டன் படத்தை எழுதிய அண்ணன் பிரபாகர் வாழ்க...:))

ஹேமா said...

ரசிக்க வைத்த அனுபவங்கள் அருமை.

துபாய் ராஜா said...

அருமையான தொகுப்பு. இப்போ என்னதான் டி.வி. சேனல்கள்ல புதுப்புது படமா போட்டாலும் காலேஜ் படிக்கும் போது தியேட்டர்ல போய் அடிச்சு, புடிச்சு படம் பார்த்தது மாதிரி வருமா...

கிரி said...

படங்கள் தேர்வு நன்றாக உள்ளது பிரபாகர் :-) ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லை.

கரகாட்டக்காரன் இன்று சன் டிவி யில் போட்டான்.. எத்தனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம். காமெடிக்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த படமே சிறப்பு.

Chitra said...

ஒவ்வொரு படத்துக்கு பின்னும் உள்ள நினைவுகளுடன், பதிவு அருமை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

லண்டன்ல படிச்சுட்டு, சிங்கையில ஆணி புடுங்கிட்டு இருக்கும் என்னை , தொடர் பதிவுக்கு அழைத்ததற்க்கு நன்றி பிரபாகர் சார்..
இப்பதான் கொஞ்சம்..கொஞ்சம் தமிழ்ல
பேச ஆரம்பிச்சுருக்கேன்..அதனால..
.அதனால....ஹி..ஹி.. கொஞ்சம் டைம் குடுங்க.....ஹி..ஹி..

ராமலக்ஷ்மி said...

கரகாட்டக்காரன் பாடல்கள் அத்தனையும் இனிமையானவை. படங்களுடனான நினைவுகளையும் பகிர்ந்த விதம் அருமை.

சைவகொத்துப்பரோட்டா said...

தானைத்தலைவன், டவுசர் நாயகனின்
கரகாட்டக்காரன் எத்தனை முறை
பார்த்தாலும் சலிக்காது.

க.பாலாசி said...

கரகாட்டக்காரன் நம்ம சாய்ஸ்... மறக்கமுடியாத படம்.... பாடல்களும்....

பனித்துளி சங்கர் said...

படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது .

பகிர்வுக்கு நன்றி !

தொடருங்கள் மீண்டும் வருவேன் .

அய்யனார் said...

எங்க தலைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னீங்களா..?!

gnanamani said...

Hello neenga perambalur ah, naan perambalur than...ippo chennai la ph.d., pannuren

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
வித்தியாசமான நனவோடை. சபாஷ்:)
//

ரொம்ப நன்றிங்கய்யா!

//
சத்ரியன் said...
அப்பன் வீட்டு காசுல அங்க இங்க சுத்தி படம் பாத்ததும் இல்லாம, இளமைக்கால வரலாறு பக்காவா பதிவு பண்ணி வெச்சி, எங்களையெல்லாம் படிக்க வெச்சி.... ஜமாய்ங்க.
//
நன்றி சத்ரியன்... உங்க தொடர் ஆதரவுக்கு, அன்பிற்கு...

//
முகிலன் said...
//வித்தியாசமான நனவோடை. சபாஷ்:)//
ரிப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்
//

நன்றி தினேஷ், எழுதத் துண்டி நினைவுகளை கிளர்ந்தமைக்கு...

பிரபாகர் said...

//
முகிலன் said...
ஃபோட்டோ கமெண்டை, நான் மட்டும் டிவி பாக்கக்கூடாதாம்னு மாத்துங்க.. :))
//
மாத்திட்டேன், நீங்க சொன்ன உடனே!

//
சேட்டைக்காரன் said...
கரகாட்டக்காரன் படத்துலே இவ்வளோ சமாச்சாரம் இருக்கா...? அசத்தல்...!
எளிமையான நடையில், வித்தியாசமான, இரத்தினச் சுருக்கமான தொகுப்பு..!
//
நன்றி சேட்டை நண்பா!

//
ச.செந்தில்வேலன் said...
இந்த ஐந்தும் கலக்கல்.
அஞ்சலி, கரகாட்டக்காரன்,ஈரம் என்னுடைய கலெக்ஷனில் இருக்கும் படங்கள். அழகான தொகுப்பு உங்கள் நினைவுகளுடன்.. :)
//

நன்றிங்க செந்தில்!

பிரபாகர் said...

//
மங்குனி அமைச்சர் said...
good selection
//

நன்றி மங்குனி....

//
ரோஸ்விக் said...
ஆஹா மாட்டிவிடுறாரே! ... நான் அதிகமா படங்களே பாக்குறதில்லையே அண்ணே!
இந்த பரீட்சைக்கு படிக்க கொஞ்சம் டயம் வேணும். :-))

//

ஒய்விருந்தா மட்டும் எழுதுங்க, கட்டாயமில்லை...

//
நல்லவன் கருப்பு... said...
அண்ணே,
எப்படியோ அப்பா கொடுத்த காசுல எல்லாப்படத்தையும் பாத்துட்டு...."வரலாறு முக்கியம் அமைச்சரேன்னு" பதிவா போட்டுட்டீங்க...
என்ஜாய் பண்ணுங்க.....
ரெண்டு பதிவும் நல்லா இருக்கு....
நல்லவன் கருப்பு...
//

நன்றி கருப்பு!

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
தலைவர் ராமராஜனின் கரகாட்டன் படத்தை எழுதிய அண்ணன் பிரபாகர் வாழ்க...:))
//
மறக்க முடியுமா? அதான்! நன்றி பிரதாப்.

//
ஹேமா said...
ரசிக்க வைத்த அனுபவங்கள் அருமை.
//
நன்றி சகோதரி!

//
துபாய் ராஜா said...
அருமையான தொகுப்பு. இப்போ என்னதான் டி.வி. சேனல்கள்ல புதுப்புது படமா போட்டாலும் காலேஜ் படிக்கும் போது தியேட்டர்ல போய் அடிச்சு, புடிச்சு படம் பார்த்தது மாதிரி வருமா...
//
ஆமாம் ராஜா... நினைத்து மட்டுமே பாக்கமுடியும் இன்றைய காலக்கட்டத்தில்...

பிரபாகர் said...

//
கிரி said...
படங்கள் தேர்வு நன்றாக உள்ளது பிரபாகர் :-) ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லை.
கரகாட்டக்காரன் இன்று சன் டிவி யில் போட்டான்.. எத்தனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம். காமெடிக்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த படமே சிறப்பு.
//
இருக்கிறது கிரி... எல்லாம் என்னால் பார்க்கப்பட்டது, அழகான சம்பவங்களை எனக்குள் விதைத்தது. ஜனரஞ்சகம், குழந்தைகள் படம், சஸ்பென்ஸ் படம், காதல் படம், வாழ்வியல் படம் என எல்லாம் இருக்கே?

//
Chitra said...
ஒவ்வொரு படத்துக்கு பின்னும் உள்ள நினைவுகளுடன், பதிவு அருமை.
//
நன்றி சித்ரா, உங்களின் தொடர்ந்த ஆதரவு, மற்றும் அன்பிற்கு.

//
பட்டாபட்டி.. said...
லண்டன்ல படிச்சுட்டு, சிங்கையில ஆணி புடுங்கிட்டு இருக்கும் என்னை , தொடர் பதிவுக்கு அழைத்ததற்க்கு நன்றி பிரபாகர் சார்..
இப்பதான் கொஞ்சம்..கொஞ்சம் தமிழ்ல
பேச ஆரம்பிச்சுருக்கேன்..அதனால..
.அதனால....ஹி..ஹி.. கொஞ்சம் டைம் குடுங்க.....ஹி..ஹி..
//
பொறுமையா எழுதுங்க பட்டா!

பிரபாகர் said...

//
ராமலக்ஷ்மி said...
கரகாட்டக்காரன் பாடல்கள் அத்தனையும் இனிமையானவை. படங்களுடனான நினைவுகளையும் பகிர்ந்த விதம் அருமை.
//
ரொம்ப நன்றிங்க!

//
சைவகொத்துப்பரோட்டா said...
தானைத்தலைவன், டவுசர் நாயகனின்
கரகாட்டக்காரன் எத்தனை முறை
பார்த்தாலும் சலிக்காது.
//
வாங்க நண்பா!

//
க.பாலாசி said...
கரகாட்டக்காரன் நம்ம சாய்ஸ்... மறக்கமுடியாத படம்.... பாடல்களும்....
//
நன்றி இளவல்....

பிரபாகர் said...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது .
பகிர்வுக்கு நன்றி !

தொடருங்கள் மீண்டும் வருவேன் .

//
நன்றி சங்கர்!
//
அய்யனார் said...
எங்க தலைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னீங்களா..?!
//
சொல்லிட்டாப் போச்சு! வன்றி அய்யானார்.

//
gnanamani said...
Hello neenga perambalur ah, naan perambalur than...ippo chennai la ph.d., pannuren
//
இல்லைங்க, நாம ஆத்தூர் பக்கத்துல தெடாவூர். படிச்சி வேலை பார்த்தது எல்லாம் பெரம்பலூர்ல.

//
www.bogy.in said...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
//
ரொம்ப நன்றிங்க....

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB