சிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...

|

விவரம் தெரிந்த சிறிய வயதிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு விஷயத்திலும் பல்வேறு மாற்றங்களைப் பார்த்து வந்திருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் எப்படி இருக்கிறது என நமக்கெல்லாம் தெள்ளென தெரிந்தாலும் பழையனவற்றை திரும்பிப் பார்க்கும் வரிசையில் முதலாவதாய் ஆரம்பப்பள்ளியின் சிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...

சிறு வயதில் இரு இடங்களில் நுழையும்போது மனம் கொஞ்சம் பயப்படும், ஆர்ப்பரிக்கும் எண்ணங்கள் அடங்கி சாந்தமாகும், அவை கோவில் மற்றும் பள்ளி. தப்பு செய்தால் சாமி கண்ணை குத்திவிடும், ஆசிரியர் அடித்து விடுவார் எனும் பயத்தின் காரணமாயும் அல்லது பெற்றோர் மற்றும் சுற்றத்தார் நம்மை வழிநடத்தியதாலும் இருக்கலாம்.

ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கப்பட்டு வந்தார்கள். அவர் சொல்வதுதான் மிகச் சரி என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். வீட்டில் அடங்காத பிள்ளைகள் கூட ஆசிரியரிடம் சொல்கிறேன் என சொன்னால் மறுபேச்சில்லாமல் மறுக்காமல் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

மஞ்சள் கலரில் ஒரு ஜவுளி கடை துணிப்பை (நம்மள மாதிரி ஆளுங்க), வயர்களால் பின்னப்பட்ட பை(பெரும்பாலும் மாணவிகள் கொண்டு வருவார்கள்), பூ வேலைப்பாடுகளுடன் கூடிய துணிப்பை (வசதிக்கார பசங்க), வெள்ளை நிற உர சாக்குகளில் செய்யப்பட்ட சாக்குப்பை (நம்ம விட கொஞ்சம் வசதியானவங்க) போன்றவைகள் தான் பெரும்பாலும் புத்தகம் சிலேட்டு நோட்டுகளை சுமக்க உதவின.

அப்போது சீருடை என்பது ஆரம்ப வகுப்புகளுக்கு கிடையாது. போட்டு வரும் துணிகளே அவர்களின் வசதியினை பறைச்சாற்றும். துவைத்து மாற்றி மாற்றி போட்டு வருவதற்கும், சலவை செய்து தினமும் ஒன்றாய் போடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? ஆசிரியரே பார்த்து திட்டி துவைத்து போட்டுவரச் சொல்லுமளவிற்கு ஒரே டிராயர் சட்டையை போட்டும் வசதி குறைவான மாணவர்களும், கிழிந்த டிரயருடன் போஸ்ட் ஆபிஸ் என கிண்டல் செய்யுமாறு போட்டு வருபவர்களும் என எல்லா விதத்திலும் கலந்து இருப்பார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களை ரொம்பவும் அழுக்காக போட்டு வராதபடியும், பொத்தான்கள் இல்லை என்றால் ஊக்கு குத்தியாவது வரவேண்டும் எனவும், கிழிந்திருந்தால் தைத்து போட்டு வரவேண்டும் என்று அன்பாய் சொல்லியும், அடுத்து திட்டியும், அதன்பின் அடித்தும் பார்த்துக்கொள்வார்கள். கந்தையானாலும் கசக்கிக்கட்டு, கூழானாலும் குளித்துக்குடி என்பவை சுத்தமாய் இருப்பதற்கு அவர்களால் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டவை.

சிலேட்டு பென்சில்தான் (பல்பம் என கேள்விப்பட்டதோடு சரி, எங்கள் பக்கத்தில் பென்சில்தான்) ஆரம்ப நிலையில். குச்சி பென்சில், கட்டை பென்சில் என இரண்டு இருக்கும், குச்சி உருண்டையாயும், கட்டை தட்டையாயும் இருக்கும்.

குச்சி பென்சில் கல் சிலேட்டில் மட்டும் நன்றாக எழுதும், நிறைய எழுதுவதற்கு வரும். கட்டை பென்சில் நன்றாக எழுதும் அதே சமயம் சீக்கிரம் தீர்ந்துவிடும். பென்சில் திருட்டுக்கள் சாதாரணமாய் நடக்கும். பண்ட மாற்றுக்கு பென்சில்கள் பெரிதும் உதவியாயிருக்கும். வீட்டில் இருந்து கொஞ்சம் தின்பண்டம் கொண்டுவந்தால் போதும், நிறைய பென்சில்கள் பதிலுக்கு கிடைக்கும். (தாத்தா வீட்டிலிருந்து படிச்சப்போ கரும்பு வெட்டி வெல்லம காய்ச்சி வித்ததால அச்சுவெள்ளம் பண்ட மற்றுக்கு ரொம்ப உதவியா இருந்துச்சி)

சிலேட்டுகளில் இரண்டு வகை இருக்கும். கல் சிலேட் மற்றும் தகர சிலேட். கல் சிலேட்டில் எல்லா பென்சில்களும் நன்றாக எழுதும், ஆனால் தகர சிலேட்டில் கட்டை பென்சில் மட்டும்தான் நன்றாக எழுதும். கல் சிலேட் கீழே விழுந்தால் உடைந்துவிடும், நிறைய கவனமெடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் எச்சில் போட்டுத்தான் சிலேட்டுக்களை அழிப்பது வழக்கம். வாத்தியார், வீட்டில் யாராவது திட்டினால் மட்டும் தண்ணீர் தொட்டு. தினமும் தவறாது வீட்டுப்பாடம் எழுதிவர வேண்டும். ஆசிரியர் அதை பார்த்து அவரது முத்திரையை சிலேட்டிலும், இல்லையென்றால் முதுகிலும் பதிப்பார்.

கொண்டு வரும்போது புத்தகங்களுக்கிடையே வைத்து எழுதியிருக்கும் வீட்டுப்பாடம் அழியாமல் எடுத்து வருவது, பையை தூக்கிப் போட்டாலும் உடையாத அளவிற்கு பக்குவமாய் வைப்பது என சிலேட்டுக்களை பராமரிக்க நிறைய மெனக்கிட வேண்டும்.

எழுதுவது பளிச்சென்று தெரிய சிலேட்டுக்கு கரி போடவேண்டும். கரி, ஊமத்தந்தழை இரண்டையும் சேகரித்து யாரும் பார்க்கவில்லையென்றால் நெல் குத்தும் உரலிலிலும், இல்லையென்றால் கல்லை வைத்து மசிய இடிக்க வேண்டும்(உரல வீணாக்கி புட்டானுங்க பாவின்னு திட்டு வாங்கறது தனி கதை).

பின் அந்த விழுதை சிலேட்டுக்களில் அப்பி நன்றாக காய வைத்து, காய்ந்தவுடன் எழுதும்போது பளீரென எழுத்துக்கள் தெரியும்போது முகத்தில் மலர்ச்சியும், சந்தோஷமும் பூரித்து அப்படி ஒரு நிறைவை கொடுக்கும்.

சார் என்னை அடித்துவிட்டன், கிள்ளிவிட்டான், எச்சில் துப்புகிறான், எனது புத்தகத்தை கிழித்துவிட்டான் என முறையீடுகளும் அதற்கு குச்சால் ஏற்றார்போல் பரிகாரங்களும் நடக்கும்.

டிக்டேஷன், சிறு கணக்குகள் போடுதல், சொல்லித்தரும் பாடல்களை ஒப்பித்தல், மாலையானல் மணலில் புறண்டு விளையாடல் என பொழுது இனிமையாய் கழியும்.

பரீட்சைக்கு வசதியிருந்தால் கிளிப் வைத்த அட்டை, இல்லையென்றால் தினசரி காலண்டரின் அட்டை என எடுத்துக்கொண்டு செல்லவேண்டும் மூன்று வகுப்புகளுக்கு மேல். அதற்குக் கீழ் சிலேட்டுத்தான் எல்லாம்.

சுருங்கச்சொன்னால், குறைவாய் படித்து, நிறைய விளையாடி மிக சந்தோஷமாயிருந்த தருணம் அது...

வலச்சரத்தில் இன்று நான்காம் நாள். சென்று பாருங்களேன்...

22 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Paleo God said...

அப்படியே பள்ளிக்காலத்தை கண் முன் கொண்டுவந்துவிட்டீர்கள் பிரபா..:)

நாங்கள் கோவை கொடி இலைகளை பறித்து சிலேட்டில் தடவுவோம்..:))

கடைசி வரி நச்..:)))

Anonymous said...

//வயர்களால் பின்னப்பட்ட பை(பெரும்பாலும் மாணவிகள் கொண்டு வருவார்கள்)//

ஹஹா. நான் இந்த வயர் கூடைப்பைதான் எடுத்துட்டு போவேன் பள்ளிக்கூடத்துக்கு சின்னதுல. ஒரு பத்தாவது போனதுக்கப்பறம் ஸ்டைலான பைதான் கொண்டுபோவேன்னு அடம் புடிச்சு வேற ஜீன்ஸ் பை வாங்கினமுல்ல.

Unknown said...

பழைய ஞாபகங்களக் கிளறி விட்டுட்டிங்க. அது என்ன சந்தன முல்லையும் இதே மாதிரி ஒரு பதிவு போட்டுருக்காங்க. நீங்களுமா?

இந்தக் அலுமினியத்துல சூட்கேஸ் மாதிரி ஒரு ஸ்கூல் பெட்டி இருக்குமே. அதெல்லாம் கொண்டு போனதில்லையா?

VISA said...

ஏக்கம்....

vasu balaji said...

முகிலன் said...

/ இந்தக் அலுமினியத்துல சூட்கேஸ் மாதிரி ஒரு ஸ்கூல் பெட்டி இருக்குமே. அதெல்லாம் கொண்டு போனதில்லையா?/

ம்கும். 5வது படிக்கும்போது கேட்டப்ப கிடைச்ச பதில் படிக்க போறியா, முடிவெட்டப் போறியான்னு:)). அப்புறம் 10வது படிக்கிறப்ப எலாஸ்டிக் (வெள்ளை 10 காசு, கலர் 15காசு) அது வாங்க பட்டபாடு.

செ.சரவணக்குமார் said...

வழக்கம்போலவே உங்கள் அருமையான நடையில்..

Prathap Kumar S. said...

ஆஹா... ஒரு இருபது வருஷம் பின்னாடி பார்க்க வச்சுட்டீங்களேண்ணே...

//வாத்தியார், வீட்டில் யாராவது திட்டினால் மட்டும் தண்ணீர் தொட்டு. //

அப்பும் தண்ணி சீக்கிரம் காயறதுக்கு.. காக்கா காக்கா தண்ணிக்குடின்னு கூட சொல்லுவோம்...அதை வுட்டுட்டீங்களே...

கையை பாம்பு மாதிரி வச்சுகிட்டு குச்சிக்கொடு இல்ன்னா பாம்பு கொத்தும்னு பொண்ணுங்களை மிரட்டறது... அதையும் விட்டுட்டீங்களே....

சே... கோடி கொடுத்தாலும் திரும்ப கிடைக்காத பருவங்கள்...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நான் அஞ்சாவது படிக்கையில ஒரு வாத்தியார் எங்கப்பாவுக்குத் தெரிஞ்சவர்.அவரு வீட்டுக்காரம்மா ஊருக்குப்போயிட்டா அவரோட 17 வயது அழகான பொண்ணுக்கு துணையா என்னப்போகச்சொல்லிடுவாரு.இதுக்காக தெரு முக்குல நின்னுக்கிட்டிருப்பாரு.அவுங்கவீட்டுக்கு விருந்தாளி வந்துட்டா மத்த பொண்ணுங்கள்லாம் வேலை செய்யக்கூட்டிட்டுப்போவாரு.எங்கப்பா அவரக்கொன்னுடுவாங்கன்னு பயந்து வேல செய்ய என்னக்கூப்பிடமாட்டாரு.அதுனால நானும் இதவீட்டுல சொல்ல மாட்டேன்.அந்தக்காலம்லாம் கெடைக்குமாங்ணா?

sambasivamoorthy said...

Today Apple launched Islate (Ipad). Your flash back shows how improved/missed so many things in our lifestyle.

Good flash back

Cheers....

Menaga Sathia said...

உங்க அனுபவம் கலக்கல்....எனக்கும் சின்ன வயசு ஞாபகம் வந்துடுச்சு சகோ...

ரோஸ்விக் said...

புளியம்பழம் தாரேன் நீங்க எனக்கு ஒரு சிலட்டு குச்சி தாரீங்களா?? :-))

படிக்க ஆரம்பிச்ச உடனே டவுசர மாட்டிகிட்டு நானும் பள்ளிக்கூடம் போனேன்... படிச்சு முடிச்ச உடனே டவுசர கழட்டிட்டு... (சந்தோஷத்தையும் தான்) பேண்டு போட்டு இன்பன்னி, இறுக்கமான மனசோட போட்டி தட்டிகிட்டு இருக்கேன். :-)

நசரேயன் said...

நல்ல கொசுவத்தி

துபாய் ராஜா said...

//மஞ்சள் கலரில் ஒரு ஜவுளி கடை துணிப்பை (நம்மள மாதிரி ஆளுங்க), வயர்களால் பின்னப்பட்ட பை(பெரும்பாலும் மாணவிகள் கொண்டு வருவார்கள்), பூ வேலைப்பாடுகளுடன் கூடிய துணிப்பை (வசதிக்கார பசங்க), வெள்ளை நிற உர சாக்குகளில் செய்யப்பட்ட சாக்குப்பை (நம்ம விட கொஞ்சம் வசதியானவங்க)/

நவீன இண்டர்நேஷனல் பிராண்ட் பேக்குகள் கூட இந்த பைகளுக்கு ஈடாகாது. நல்லதொரு பகிர்வு.

புலவன் புலிகேசி said...

மறுபடியும் பள்ளிக்கு போற ஆசையை தூண்டி விட்டீங்களே தல..தல சிலேட்டு இரண்டல்ல மூன்று வகை அட்டை சிலேட்டு நான் உபயோகித்திருக்கிறேன்.

பிரபாகர் said...

//
பலா பட்டறை said...
அப்படியே பள்ளிக்காலத்தை கண் முன் கொண்டுவந்துவிட்டீர்கள் பிரபா..:)

நாங்கள் கோவை கொடி இலைகளை பறித்து சிலேட்டில் தடவுவோம்..:))

கடைசி வரி நச்..:)))
//
நன்றி நண்பா... கோவை இலைகளையும் உபயோகிப்போம்...

//
சின்ன அம்மிணி said...
//வயர்களால் பின்னப்பட்ட பை(பெரும்பாலும் மாணவிகள் கொண்டு வருவார்கள்)//

ஹஹா. நான் இந்த வயர் கூடைப்பைதான் எடுத்துட்டு போவேன் பள்ளிக்கூடத்துக்கு சின்னதுல. ஒரு பத்தாவது போனதுக்கப்பறம் ஸ்டைலான பைதான் கொண்டுபோவேன்னு அடம் புடிச்சு வேற ஜீன்ஸ் பை வாங்கினமுல்ல.
//
நன்றிங்க அம்மணி, எல்லாம் நினைத்துமட்டும் பார்க்கிற மாதிரி ஆயிடுச்சி...

பிரபாகர் said...

//
முகிலன் said...
பழைய ஞாபகங்களக் கிளறி விட்டுட்டிங்க. அது என்ன சந்தன முல்லையும் இதே மாதிரி ஒரு பதிவு போட்டுருக்காங்க. நீங்களுமா?

இந்தக் அலுமினியத்துல சூட்கேஸ் மாதிரி ஒரு ஸ்கூல் பெட்டி இருக்குமே. அதெல்லாம் கொண்டு போனதில்லையா?
//
எங்க காலத்துல அந்த மாதிரி இல்லைங்க...

//
VISA said...
ஏக்கம்....
//
நன்றி விசா...

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
முகிலன் said...

/ இந்தக் அலுமினியத்துல சூட்கேஸ் மாதிரி ஒரு ஸ்கூல் பெட்டி இருக்குமே. அதெல்லாம் கொண்டு போனதில்லையா?/

ம்கும். 5வது படிக்கும்போது கேட்டப்ப கிடைச்ச பதில் படிக்க போறியா, முடிவெட்டப் போறியான்னு:)). அப்புறம் 10வது படிக்கிறப்ப எலாஸ்டிக் (வெள்ளை 10 காசு, கலர் 15காசு) அது வாங்க பட்டபாடு.
//
சரியா சொன்னீங்கய்யா!

//
செ.சரவணக்குமார் said...
வழக்கம்போலவே உங்கள் அருமையான நடையில்..
//
நன்றி நண்பா, அன்பிற்கு கருத்துக்கு.

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
ஆஹா... ஒரு இருபது வருஷம் பின்னாடி பார்க்க வச்சுட்டீங்களேண்ணே...

//வாத்தியார், வீட்டில் யாராவது திட்டினால் மட்டும் தண்ணீர் தொட்டு. //

அப்பும் தண்ணி சீக்கிரம் காயறதுக்கு.. காக்கா காக்கா தண்ணிக்குடின்னு கூட சொல்லுவோம்...அதை வுட்டுட்டீங்களே...

கையை பாம்பு மாதிரி வச்சுகிட்டு குச்சிக்கொடு இல்ன்னா பாம்பு கொத்தும்னு பொண்ணுங்களை மிரட்டறது... அதையும் விட்டுட்டீங்களே....

சே... கோடி கொடுத்தாலும் திரும்ப கிடைக்காத பருவங்கள்...
//
ஆமாம் தம்பி! இழந்துவிட்ட விஷயங்களாகி விட்டன...

//
க.நா.சாந்தி லெட்சுமணன். said...
நான் அஞ்சாவது படிக்கையில ஒரு வாத்தியார் எங்கப்பாவுக்குத் தெரிஞ்சவர்.அவரு வீட்டுக்காரம்மா ஊருக்குப்போயிட்டா அவரோட 17 வயது அழகான பொண்ணுக்கு துணையா என்னப்போகச்சொல்லிடுவாரு.இதுக்காக தெரு முக்குல நின்னுக்கிட்டிருப்பாரு.அவுங்கவீட்டுக்கு விருந்தாளி வந்துட்டா மத்த பொண்ணுங்கள்லாம் வேலை செய்யக்கூட்டிட்டுப்போவாரு.எங்கப்பா அவரக்கொன்னுடுவாங்கன்னு பயந்து வேல செய்ய என்னக்கூப்பிடமாட்டாரு.அதுனால நானும் இதவீட்டுல சொல்ல மாட்டேன்.அந்தக்காலம்லாம் கெடைக்குமாங்ணா?
//
கண்டிப்பா கிடைக்காது சகோதரி... உங்க அனுபவத்தையே இடுகையா எழுதலாம் போல இருக்கே.

பிரபாகர் said...

//
sambasivamoorthy said...
Today Apple launched Islate (Ipad). Your flash back shows how improved/missed so many things in our lifestyle.

Good flash back

Cheers....
//
நன்றி மூர்த்தி...

//
Mrs.Menagasathia said...
உங்க அனுபவம் கலக்கல்....எனக்கும் சின்ன வயசு ஞாபகம் வந்துடுச்சு சகோ...
//
நன்றிங்க சகோதரி...

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
புளியம்பழம் தாரேன் நீங்க எனக்கு ஒரு சிலட்டு குச்சி தாரீங்களா?? :-))

படிக்க ஆரம்பிச்ச உடனே டவுசர மாட்டிகிட்டு நானும் பள்ளிக்கூடம் போனேன்... படிச்சு முடிச்ச உடனே டவுசர கழட்டிட்டு... (சந்தோஷத்தையும் தான்) பேண்டு போட்டு இன்பன்னி, இறுக்கமான மனசோட போட்டி தட்டிகிட்டு இருக்கேன். :-)
//
வாங்கய்யா வாங்க! என்னடா தம்பிய காணுமேன்னு பாத்தேன்...

//
நசரேயன் said...
நல்ல கொசுவத்தி
//
ரொம்ப நன்றிங்க...

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
//மஞ்சள் கலரில் ஒரு ஜவுளி கடை துணிப்பை (நம்மள மாதிரி ஆளுங்க), வயர்களால் பின்னப்பட்ட பை(பெரும்பாலும் மாணவிகள் கொண்டு வருவார்கள்), பூ வேலைப்பாடுகளுடன் கூடிய துணிப்பை (வசதிக்கார பசங்க), வெள்ளை நிற உர சாக்குகளில் செய்யப்பட்ட சாக்குப்பை (நம்ம விட கொஞ்சம் வசதியானவங்க)/

நவீன இண்டர்நேஷனல் பிராண்ட் பேக்குகள் கூட இந்த பைகளுக்கு ஈடாகாது. நல்லதொரு பகிர்வு.
//
நன்றி ராஜா... உங்களின் பின்னூட்டம் என்றாலே என்றுமே ஸ்பெசல்தான்.

//
புலவன் புலிகேசி said...
மறுபடியும் பள்ளிக்கு போற ஆசையை தூண்டி விட்டீங்களே தல..தல சிலேட்டு இரண்டல்ல மூன்று வகை அட்டை சிலேட்டு நான் உபயோகித்திருக்கிறேன்.
//
நன்றி புலிகேசி.

நிலாமதி said...

நாங்களும் சிலேட பாவித்தோம் சரியாக் ஞாபகம் இல்ல ....மீண்டும் ஞாபகபடுத்தியமைக்கு
எங்கேயோ போய்டீங்க தல.....நன்றிங்க. அந்த நாள்
ஞாபகம நெஞ்சிலே நண்பனே .......
இந்த நாள் அன்று போல் இல்லியே ஏன்? ஏன?.......

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB